ECONOMYMEDIA STATEMENTYB ACTIVITIES

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க 555 மரங்கள்- செந்தோசா தொகுதியில் நடப்பட்டன

கிள்ளான், செப் 26– செந்தோசா சட்டமன்றத் தொகுதி புரோ500 எனும் திட்டத்தின் கீழ் 555 சகுரா வகை (செர்ரி) மரங்கள் நட்டுள்ளன. இம்மரங்கள் ஜாலான் ராஜா நோங் மற்றும் ஜாலான் சுங்கை ஜாத்தி சாலைகளில் நடப்பட்டுள்ளன.

அப்பகுதியில் இயற்கைச் சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த மரம் நடும் இயக்கம் மேற்கொள்ளப்பட்டதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.

இப்பகுதிகளில் அதிமான மரங்கள் இல்லாததை கருத்தில் கொண்டு முடிந்த அளவு அதிகமான மரங்களை இங்கு நடுவதற்கு திட்டமிட்டுள்ளோம். இதன் பலனை அடுத்த ஐந்தாண்டுகளில் காண முடியும் என அவர் குறிப்பிட்டார்.

வண்ணப் பூக்கள் பூக்கும் இம்மரங்கள் இப்பகுதிக்கு அழகான மற்றும் இதமான தோற்றத்தைத் தரும். தொடக்கத்தில் 500 மரங்களை நடுவதற்கு இலக்கு நிர்ணயித்திருந்தோம். எனினும் தற்போது கூடுதலான மரங்களை நடவு செய்துள்ளோம் என்றார் அவர்.

சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் தலைமையில் இங்குள்ள தொகுதி சேவை மையத்தில் நடைபெற்ற மரம் நடும் இயக்கத்தை நிறைவு செய்யும் நிகழ்வில் அவர் இவ்வாறு கூறினார்.

இந்த மரம் நடும் இயக்கம் இம்மாத தொடக்கம் முதல் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய அவர், மேலும் 500 மரங்களை நடுவதை இலக்காக கொண்ட இரண்டாம் கட்ட இயக்கம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்றார்.

மரங்களால் நிரப்பப்பட வேண்டிய காலியிடங்கள் இங்கு அதிகமாக உள்ளன. சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு  இயன்ற அனைத்தையும் நாம் செய்யவுள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த மரங்களுக்கு நீரூற்றுவது மற்றும் உரமிடுவது போன்ற பணிகளை குத்தகையாளர் மூன்று மாதங்களுக்கு மேற்கொள்வார். அதன் பின்னர் இப்பணிகளை கிள்ளான் நகராண்மைக் கழகம், பொதுப்பணி இலாகா மற்றும் செந்தோசா பணிக்குழு ஏற்றுக் கொள்ளும் என்றார் அவர்.

 


Pengarang :