ECONOMYPBTSELANGOR

வெ.15,000 மானியத்தின் வழி பாதிக்கப்பட்ட ஹோட்டல் பணியாளர்களுக்கு  உதவி

ஷா ஆலம், செப் 27- சிலாங்கூர் மாநில அரசு வழங்கிய 15,000 வெள்ளி மானியத்தைக் கொண்டு பாதிக்கப்பட்ட ஹோட்டல் துறை பணியாளர்களுக்கு உணவுப் பொருள் உதவியை மலேசிய ஹோட்டல் சங்கத்தின் (எம்.ஏ.எச்.) சிலாங்கூர் பிரிவு வழங்கும்.

கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அந்த மானியத்தைக் கொண்டு 860 உணவுப் பொட்டலங்கள் அண்மையில் விநியோகிக்கப்பட்ட வேளையில் அடுத்தக் கட்ட உதவி விரைவில் வழங்கப்படும் என்று அச்சங்கத்தின் உதவித் தலைவர் நஸ்ரி அகமது கூறினார்.

கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறைக்கு உதவுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கு தாங்கள் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

சுற்றுலா பற்றுச்சீட்டு விநியோகம் தவிர்த்து எம்.ஏ.எச். உள்பட 17 சுற்றுலா சங்கங்களுக்கு தலா 15,000 உதவித் தொகையாகவும் மாநில அரசு வழங்கியுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் எங்களின் சுமையைக் குறைக்க உதவும் அதே வேளையில் சுற்றுலாத் துறையின் மீட்சிக்கும் துணை புரியும் என்றார் அவர்.

கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் தொகுப்பின் கீழ் சுற்றுலாத் துறையை மீட்சியுறச் செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு 25 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி ஒதுக்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ  அமிருடின் ஷாரி கடந்த ஜூன் 9 ஆம் தேதி அறிவித்திருந்தார்.


Pengarang :