MEDIA STATEMENTSELANGORTOURISM

எஸ்.ஒ.பி. விதிகளை மீறும் சுற்றுப்பயணிகளுக்கு அபராதம்- ஊராட்சி மன்றங்களின் நடவடிக்கைக்கு வரவேற்பு

கிள்ளான், செப் 27- சுற்றுலா மையங்களில் எஸ்.ஒ.பி. எனப்படும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றத் தவறும் வருகையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் ஊராட்சி மன்றங்களின் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படவில்லை என்பதோடு அந்நோய்த் தொற்றினால் பொதுமக்கள் பாதிக்கப்படும் அபாயம் இன்னும் உள்ளதால் இத்தகைய நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என்று சுற்றுலாத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்  ஹி லோய் சியான் கூறினார்.

ஊராட்சி மன்றங்கள் இத்தகைய நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகிறது. எஸ்.ஒ.பி. விதிகளை மீறுவோருக்கு ஊராட்சி மன்றங்கள் அபராதம் விதிப்பதற்கு தேசிய பாதுகாப்பு மன்ற விதிகளில் இடம் உள்ளது என்றார் அவர்.

சில இடங்களில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகமானோர் ஒன்று கூடுகின்றனர். அத்தகைய சூழ்நிலைகளில் விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிப்பதை  தவிர  வேறு வழியில்லை என்று அவர் மேலும் சொன்னார்.

நோய்த் தொற்று இன்னும் தீவிரமான நிலையில் இருக்கும் சூழலில் தங்கள் பிள்ளைகளை விடுமுறையைக் கழிக்க வெளியில் அழைத்துச் செல்ல வேண்டாம் என்றும் பெற்றோர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

நாம் தேசிய மீட்சித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கு இன்னும் நுழையாத காரணத்தால் தற்போதைக்கு சுற்றுலா மேற்கொள்வது அவ்வளவு  பாதுகாப்பனதல்ல. மாவட்ட எல்லைகளைக் கடப்பதாக இருந்தாலும் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றிருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

பாகான் லாலாங் கடற்கரைக்கு வருவோர் எஸ்.ஒ.பி. விதிகளை மீறும் பட்சத்தில் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சிப்பாங் நகராண்மைக்கழகம் அண்மையில் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது


Pengarang :