ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

மக்களிடையே விழிப்புணர்வு குறைவு- பிளாஸ்டிக் பைகளுக்கான கட்டணம் உயர்த்தப்படலாம்

கிள்ளான், செப் 27- பிளாஸ்டிக் எனப்படும் நெகிழிப் பைகளின் பயன்பாட்டிற்கும் எதிரான பிரசாரம் நிர்ணயித்த இலக்கை அடையாவிட்டால் சிலாங்கூரில் அமல்படுத்தப்பட்டுள்ள பிளாஸ்டி பைகளுக்கான 20 காசு கட்டணம் உயர்த்தப்படலாம்.

பிளாஸ்டி பைகளுக்கு தற்போது விதிக்கப்படும் கட்டணத்தை மறு ஆய்வு செய்வதற்கு முன்னர் அந்த கட்டணம் மூலம் கடந்த ஆண்டுகளில் வசூலான தொகை குறித்து தமது தரப்பு மதிப்பீடு செய்யும் என்று சுற்றுச்சூழல்  துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

பிளாஸ்டிக் பைகளுக்கு விதிக்கப்படும் 20 காசு கட்டணம் மூலம் கடந்தாண்டு 66 லட்சம் வெள்ளியை வசூலித்தோம். இவ்வாண்டு ஜூன் மாதம் வரை 25 லட்சம் வெள்ளி வரை வசூலாகியுள்ளது. இந்த தொகை வரும் ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டிற்கு எதிரான நமது பிரசாரம் தோல்வியில் முடிந்ததாக கருத வேண்டி வரும் என்றார் அவர்.

சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு ஏதுவாக பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தாமலிருப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்த கட்டண உயர்வை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். பொது மக்கள் தொடர்ந்து தன்மூப்பாக செயல்பட்டால் கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என்றார் அவர்.

செந்தோசா தொகுதி ஏற்பாட்டில் நேற்று இங்கு நடைபெற்ற புரோ500 எனும் மரம் நடும் இயக்கத்தை நிறைவு செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த கட்டண வசூலிப்பின் மூலம் கிடைக்கப்பெறும் தொகை அறக்கட்டளை நிதியில் சேர்க்கப்பட்டு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்படுவதாகவும் என அவர் சொன்னார்.


Pengarang :