ECONOMYMEDIA STATEMENTNATIONAL

7,000 மாணவர்களுக்கு அக். முதல் தேதி தொடங்கி இலவச இணைய தரவு சேவை

ஷா ஆலம், செப் 29- வரும் அக்டோபர் முதல் தேதி தொடங்கி மாநிலத்தின் 10 மாவட்டங்களில் உள்ள 7,000 சிலாங்கூர் மக்கள் டியூஷன் திட்ட (பி.டி.ஆர்.எஸ்.) மாணவர்கள் இலவச இணைய தரவு சேவையைப் பெறுவர்.

வீட்டிலிருந்து கற்றல், கற்பித்தல் நடவடிக்கையை அம்மாணவர்கள் எளிதாக மேற்கொள்வதற்கு இந்த இலவச இணைய தரவு சேவைத் திட்டம் பெரிதும் துணை புரியும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த இணைய தரவு சேவைக்கான செலவுகளை சிலாங்கூர் அரசு முழுமையாக ஏற்றுக் கொள்கிறது. இச்சேவையை பெறத் தகுதி உள்ள மாணவர்களை மாவட்ட கல்வி இலாகா அடையாளம் காணும் என்று அவர் சொன்னார்.

ஒவ்வொரு மாணவரும் மாதம் ஒன்றுக்கு 15 கிகாபைட் இணைய தரவு சேவையை பெறுவர். வரும் அக்டோபர் முதல் தேதி தொடங்கி இதனைத் பயன்படுத்தலாம். மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு இது பெரிதும் துணை புரியும் என்றார் அவர்.

இன்று தமது அதிகாரத்துவ இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அந்த இணைய தரவு சேவைக்கான சிம் கார்டுகளை அவர் கல்வி அலுவலக பிரதிநிதிகளிடம் ஒப்படைத்தார்.

கோம்பாக், பெட்டாலிங் உத்தாமா, பெட்டாலிங் பெர்டானா, சிப்பாங், கிள்ளான், உலு லங்காட், சபாக் பெர்ணம், கோல சிலாங்கூர், உலு சிலாங்கூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இத்திட்டத்தின் வழி பயன் பெறுவர்.

 


Pengarang :