Majlis Bandaraya Shah Alam (MBSA)
PBTSELANGOR

குற்றப்பதிவுகளுக்கு 70 விழுக்காடு வரை கழிவு- ஷா ஆலம் மாநகர் மன்றம் வழங்குகிறது

ஷா ஆலம், செப் 30- ஊராட்சி மன்ற துணைச் சட்டங்களின் கீழ் புரியப்பட்ட குற்றங்களுக்கு 70 விழுக்காடு வரை அபராதக் கழிவு வழங்க ஷா ஆலம் மாநகர் மன்றம் முன்வந்துள்ளது.

ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 21வது நிறைவையொட்டி அக்டோபர் மாதம் முழுவதும் இந்த அபராதக் கழிவு சலுகை வழங்கப்படும் என்று டத்தோ பண்டார் டத்தோ ஸமானி அகமது மன்சோர் கூறினார்.

கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் பொதுமக்கள் குற்றப்பதிவுகளுக்கான அபராதத் தொகையை விரைந்து செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் இந்த சலுகை வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.

ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 21வது நிறைவையொட்டி மேற்கொள்ளப்படவிருக்கும் திட்டங்கள் தொடர்பில் நேற்று இங்கு நடத்தப்பட்ட செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.

சிகையலங்கரிப்பு நிலையங்கள், பொது பூங்காக்கள், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது, உணவு விற்பனை மையங்கள் தொடர்பான குற்றங்களுக்கு இந்த அபராதக் கழிவு வழங்கப்படுகிறது என அவர் குறிப்பிட்டார்.

உணவுகளைக் கையாள்வோர், விளம்பரம், அங்காடி வியாபாரம், சாலை போக்குவரத்து விதிகள், மார்க்கெட் தொடர்பான குற்றங்களைப் புரிந்தவர்களும் இந்த சலுகையைப் பெறலாம் என்றார் அவர்.

மேல் விபரங்களைப் பெற விரும்புவோர் 03-55222882 அல்லது 02-55105133 இணைப்பு 1757,1658,1540 மற்றும் 1521 என்ற எண்களில் அல்லது eps.mbsa.gov.my.  என்ற அகப்பக்கம் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :