ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 பெருந்தொற்றைக் குறைப்பதில் சிலாங்கூர் அரசின் திட்டங்கள், அரசியல் நிலைத்தன்மை உதவி

கோம்பாக், அக் 3- சிலாங்கூர் மாநில அரசின் பல்வேறு திட்ட அமலாக்கம் மற்றும் அரசியல் நிலைத்தன்மை  காரணமாக மாநிலத்தில் தற்போது கோவிட்-19 நோய்த் தொற்று குறைந்து வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி  கூறினார்.

கடந்த ஜூலை மாதம் சிலாங்கூரில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை 7,000 முதல் 8,000 வரை உயர்ந்து மாநிலத்தின் சுகாதார முறை ஏறக்குறைய செயலிழக்கும் கட்டத்தை எட்டியது. எனினும், அனைத்து தரப்பினரின் ஒன்றுபட்ட முயற்சியின் பலனாக கடும் தாக்கத்திலிருந்து மீள முடிந்தது என்று அவர் சொன்னார்.

சிலாங்கூர் மாநில அரசு மேற்கொண்ட கோவிட்-19 பரிசோதனை நடவடிக்கைகள், தடுப்பூசி இயக்கம் மற்றும் அமல்படுத்தப்பட்ட பல்வேறு விதிமுறைகள் உரிய பலனைத் தந்துள்ளது என்றார் அவர்.

அரசியல் நிலைத்தன்மை காரணமாக இவை அனைத்தையும் சாதிக்க நம்மால் முடிந்தது. பொதுத்தேர்தலில் மக்கள் அளித்த அதிகாரத்திற்கு மதிப்பளித்தோம். அதோடு மட்டுமின்றி அந்நிய முதலீட்டாளர்கள் சிலாங்கூர் மாநிலத்திற்கு வருவதற்கு நம்பிக்கையையும் ஊட்டினோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று, கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியின் சேவை மையத்தை தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அனைவரின் நன்மைக்காக கோவிட்-19 நோய்த் தொற்றை கையாள்வதில் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள தலைவர்கள் நிபுணத்துவ போக்கை கடைபிடிக்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவருமான அவர் சொன்னார்.

தேசிய பாதுகாப்பு மன்றம் கூடும் போது அதில் கலந்து கொள்ள பிரதமர் நம்மை அழைப்பார். அமைச்சர் கைரி ஜமாலுடின் சந்திக்க வந்தால் நமது கருத்துகளையும் பரிந்துரைகளையும் கேட்டறிவார் என அமிருடின் கூறினார்.

மக்களுக்கும் அரசியல் நிலைத்தன்மைக்கும் இது அவசியமாகும். நம்மால் சமர் புரிய முடியவோ விமர்சிக்கவோ முடியாது என்பது இதன் பொருளல்ல. பல்லாண்டுகளாக பாடுபட்டு உருவாக்கிய அடித்தளம் தகர்க்கப்படும் அளவுக்கு எல்லைகளை மோதி உடைக்கக் கூடாது என்றார் அவர்.


Pengarang :