ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இளையோருக்கான தடுப்பூசித் திட்டம்- தவறான தகவல் பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை

பாகான் செராய், அக் 3- நாட்டில் பள்ளி மாணவர்களை உள்ளடக்கிய இளையோருக்கான தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டம் தொடர்பில் தவறான தகவல்கள் அடங்கிய காணொளி அல்லது செய்திகளை சமூக ஊடகங்கள் வாயிலாக பகிர்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இத்தகைய செயல்கள் தடுப்பூசித் திட்டம் சீராக நடைபெறுவதற்கு இடையூறாக அமைவதோடு பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் தடுப்பூசி மீதான அச்சத்தையும் ஏற்படுத்தும் என்று சுகாதாரத் துறை துணையமைச்சர் டத்தோ டாக்டர் நோர் அஸ்மி கசாலி கூறினார்.

தவறான தகவல்களைப் பரப்புவோருக்கு கடுமையான எச்சரிக்கையை விடுக்க விரும்புகிறேன். மாணவர்களின் உயிரைக் காப்பாற்ற நாம் முயலும் இவ்வேளையில் இத்தகைய தவறான செய்திகள் இளையோர் சம்பந்தப்பட்ட தடுப்பூசித் திட்டத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றார் அவர்.

உண்மையற்ற காணொளிகளை மற்றவர்களுக்கு அனுப்ப வேண்டாம் என்று அனைவருக்கும் நினைவுறுத்த விரும்புகிறேன். இவ்வாறு பரப்பப்படும் பல்வேறு பொய்யானத் தகவல்கள் மக்கள் மத்தியில் அச்சத்தையும் சஞ்சலத்தையும் ஏற்படுத்தும். இத்தகையச் செய்திகளைக் கண்டு நான் வருத்தமும் சினமும் அடைகிறேன் என்று அவர் சொன்னார்.

அண்மையில் ஈப்போவில் தடுப்பூசி பெற்ற மாணவர் ஒருவர் உயிரிழந்து விட்டதாக கூறும் தகவல் உள்பட பள்ளி மாணவர்களை சம்பந்தப்படுத்திய பல்வேறு பொய்யானத் தகவல்கள் காணொளி வாயிலாக பரப்பப்பட்டு வருவது தொடர்பில் அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.


Pengarang :