ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூர் ஊழலின் இருப்பிடமா? மந்திரி புசார் மறுப்பு

ஷா ஆலம், அக் 4- சிலாங்கூரில் ஊழல் தொடர்பான கைது மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் கடந்த ஐந்தாண்டுகளில்  குறைந்துள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

ஊழல் தடுப்பு ஆணையத்தின் தரவுகளை ஒப்பிடுகையில்  ஊழல் சம்பவங்கள் அதிகம் நிகழும் மாநிலமாக சிலாங்கூரை கருத முடியாது என்று அவர் சொன்னார்.

கடந்த 2016 ஆம் ஆண்டில் 79 ஆக இருந்த ஊழல் தொடர்பான கைது நடவடிக்கைகளுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு ஆகஸ்டு மாதம் வரை 43 கைது நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த எண்ணிக்கையைப் பார்க்கையில் ஊழல் நிறைந்த மாநிலமாக சிலாங்கூர் விளங்கவில்லை என்பதும் ஊழல் எண்ணிக்கையில் அதிகம் இருப்பது கிழக்கிலுள்ள மாநிலங்களே என்பதும்  தெரிய வரும். இது தவிர, மக்கள் தொகை மற்றும் துரித பொருளாதார வளர்ச்சி ஆகிய அம்சங்களைக் கருத்தில் கொண்டால் சிலாங்கூர் ஊழலின் இருப்பிடம் அல்ல என்பது தெளிவாகும் என்றார் அவர்.

ஒரு வேளை பரபரப்புக்காக வெளியிடப்படும் செய்திகள் இத்தகைய கண்ணோட்டத்தை அனைவருக்கும் ஏற்படுத்தியிருக்கலாம். இருந்த போதிலும் ஊழல் தொடர்பில் கைது மற்றும் விசாரணை மேற்கொள்ளப்படுவதை மாநில அரசு எப்போதும் வரவேற்று வந்துள்ளது. அதே சமயம், அவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்பட  வேண்டும் என்றும் அது வலியுறுத்துகிறது என அவர்  மேலும் சொன்னார்.

கடந்த மாதம் 30 ஆம் தேதி நடைபெற்ற “ சிலாங்கூர் ஊழலின் இருப்பிடமா?“ எனும் தலைப்பில் நடைபெற்ற விவாத நிகழ்வின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.  இந்த நேரடி ஒளிபரப்பு நிகழ்வில் மலேசிய ஊழல் தடுப்பூ ஆணையத்தின் சிலாங்கூர் மாநில இயக்குநர் டத்தோ அலியாஸ் சலிமும் கலந்து கொண்டார்.

கடந்த 2016 முதல் இவ்வாண்டு ஆகஸ்டு வரையிலான காலக்கட்டத்தில் சிலாங்கூரிலுள்ள 2,616 அரசு ஊழியர்களில் 267 பேர் மட்டுமே ஊழல் தொடர்பில் கைது செய்யப்பட்டனர் என்று அலியாஸ் கூறினார்.

 


Pengarang :