ECONOMYPBTSELANGOR

எஸ்.ஒ.பி. விதிமுறை அமலாக்கத்தை காஜாங் நகராண்மைக் கழகம் தொடர்ந்து கண்காணிக்கும்

உலு லங்காட், அக் 4- தேசிய மீட்சித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கு சிலாங்கூர் மாறிய போதிலும் எஸ்.ஒ.பி. எனப்படும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொது மக்கள் தொடர்ந்து பின்பற்றுவதை உறுதி செய்வதில் காஜாங் நகராண்மைக் கழகம் தொடந்து கவனம் செலுத்தும்.

மக்கள் அதிகம் கூடக்கூடிய பேரங்காடிகள், பெரிய சந்தைகள், காலைச் சந்தைகள் மற்றும் பொழுது போக்கு மையங்களில் இந்த கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று நகராண்மைக் கழகத் தலைவர் நஜ்முடின் ஜெமாய்ன் கூறினார்.

பொதுமக்கள் எஸ்.ஒ.பி. விதிகளை முறையாகப் பின்பற்றாத காரணத்தால் கோவிட்-19 நோய்த் தொற்று அதிகரித்து ஒன்றாவது மற்றும் இரண்டாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தக் கூடிய சூழல் கடந்த காலங்களில் ஏற்பட்டதைக் கருத்தில் கொண்டு தாங்கள் இக்கண்காணிப்பு பணியை தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளதாக அவர் சொன்னார்.

கோவிட்-19 நோய்த் தொற்று இன்னும் நம்மிடையே உள்ளதையும் நாம் ஒரு போதும் அலட்சியாக இருந்து விடக்கூடாது என்பதையும் மக்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

செமினி நகரில் நேற்று செமினி நதிகள் பரிவுத் திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ரா ஜெயா ஆகிய பகுதிகள் கடந்த வெள்ளிக் கிழமை முதல் தேசிய மீட்சித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கு மாறின. இதனைத் தொடர்ந்து தடுப்பூசியை முழுமையாகப் பெற்றவர்களுக்கு மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

 

 


Pengarang :