ECONOMYMEDIA STATEMENT

சம்பள உதவித் தொகை திட்டத்தின் வழி 300,000 முதலாளிகள், 29 லட்சம் ஊழியர்கள் பயன்

கோலாலம்பூர், அக் 4- சம்பள உதவித் தொகைத் திட்டத்தின் (பி.எஸ்.யு.) வழி 300,000 முதலாளிகளும் 29 லட்சம் தொழிலாளர்களும் பயன் பெற்றுள்ளதாக மனிவளத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

இத்திட்ட அமலாக்கத்திற்காக சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப் நிறுவனம் 1,800 கோடி வெள்ளியைச் செலவிட்டுள்ளதாக அவர் சொன்னார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக பாதிக்கப்பட்ட முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக அமல்படுத்தப்பட்ட சிறந்த அணுகுறையாக இந்த பி.எஸ்.யு. திட்டம் விளங்கும் காரணத்தால், சம்பந்தப்பட்டத் தரப்பினர் இதனை பெரிதும் வரவேற்றுள்ளதாக அவர் சொன்னார்.

முதலாவது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடங்கி தற்போது வரை முதலாளிகள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் இத்திட்டம் பிரசித்தி பெற்று விளங்குகிறது. நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காலத்தின் போது போதுமான அளவு நிதி ஒதுக்கீடு இத்திட்டத்திற்கு உள்ளதை அரசாங்கம்  உறுதி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பையும் அவர்கள் வெளியிட்டனர் என்றார் அவர்.

மக்களவையில் இன்று ஊழியர்களைக் காப்பாற்றுவதில் பி.எஸ்.யு திட்டத்தின் தாக்கம் குறித்து கூலிம் பண்டார் பாரு உறுப்பினர் டத்தோஸ்ரீ நசாத்தியோன் இஸ்மாயில் எழுப்பிய துணைக் கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

முன்னதாக, பாலிங் உறுப்பினர் டத்தோஸ்ரீ அப்துல்  அஜிஸ் அப்துல் ரஹிம் எழுப்பிய மூலக் கேள்விக்கு பதிலளித்த சரவணன், இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் நாட்டில் வேலையில்லாதோர் விகிதாசாரம் 4.8 விழுக்காடாக அல்லது 768,700 பேராக இருந்தது மனித வளத்துறையின் ஆய்வறிக்கை வழி தெரியவந்துள்ளது என்றார் .

எனினும், கடந்த ஜூலை மாதம் இந்த எண்ணிக்கை மேலும் 9,500 அதிகரித்து 778,200 ஆக ஆனது என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :