ECONOMYSELANGORTOURISM

பந்தாய் ரெமிஸ் கடற்கரையில் குப்பைகளின் அளவு மூன்று மடங்கு அதிகரிப்பு

கோல சிலாங்கூர், அக் 6- வார இறுதி நாட்களில் பந்தாய் ரெமிஸ் கடற்கரைக்கு வருவோரின் எண்ணிக்கை உயர்வு கண்ட காரணத்தால் இப்பகுதியில் குவியும் குப்பைகளின் அளவு மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகம் கூறியது.

இதன் காரணமாக இப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை குப்பைகளை அகற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகத் தலைவர் ரஹிலா ரஹ்மாட் கூறினார்.

இங்கு வரும் பொதுமக்களிடம் சமூக பொறுப்புணர்வை நான் எதிர்பார்க்கிறேன். ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் குப்பைகளை கண்ட இடங்களில் வீசுகின்றனர் என்று அவர் சொன்னார்.

வழக்கமாக இங்கு 100 கிலோ குப்பைகள் வரை குவியும். ஆனால் இப்போது அந்த எண்ணக்கை மூன்று மடங்கு அதிகரித்து விட்டது என்றார் அவர்.

ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹானுடன் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பந்தாய் ரெமிஸ் கடற்கரைக்கு ஆயிரக்கணக்கான சுற்றுப்பயணிகள் வருவதையொட்டி அங்கு நகராண்மைக் கழகத்தின் அமலாக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இப்பகுதிக்கு வருவோர் எஸ்.ஒ.பி. விதிகளை முறையாக கடைபிடிப்பதை உறுதி செய்து வருகிறோம். இதுவரை அனைவரும் விதிகளை முறையாகப் பின்பற்றி வருகின்றனர். மீறி நடப்போருக்கு அபராதம் விதிக்கப்படும் என்றார் அவர்.

 


Pengarang :