ECONOMYNATIONALPBT

பெண்டோரா பேப்பர் விவகாரத்தை விவாதிக்கும் தீர்மானத்தை நாடாளுமன்ற சபாநாயகர் நிராகரித்தார்.

கோலாலம்பூர், அக் 6-  பெண்டோரா பேப்பர் அம்பலப் படுத்திய நாட்டின் சில தலைவர்களின் இரகசிய நிதி கோப்புகள் தொடர்பான விவகாரத்தை விவாதிப்பதற்கு நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தாக்கல் செய்த இந்த தீர்மானத்தை  தள்ளுபடி செய்த மக்களவை சபாநாயகர் டத்தோ அஸார் ஹருண், கூட்ட நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றுள்ள விவகாரங்களை ஒதுக்கி வைக்கும் அளவுக்கு இந்த  தீர்மானத்தை முன்னிலைப்படுத்த வேண்டிய அவசரம் இல்லை என்று கூறினார்.

இதற்கு மாறாக,  இவ்விவகாரத்தை நாடாளுமன்ற சிறப்புத் தேர்வுக் குழுவின் கவனத்திற்கு கொண்டுச் செல்லும்படியும்   அவர் ஆலோசனை கூறினார்.

நாடாளுமன்றக் கூட்டத் தொடரை விட அதிக காலம் எடுத்து விரிவாக விவாதிக்கும் வாய்ப்பு நாடாளுமன்ற சிறப்புத் தேர்வில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பெண்டோரா பேப்பர் விவகாரம், பொது நலன் சம்பந்தப்பட்டதாகவும் உடனடியாக விசாரிக்க வேண்டிய அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தததாகவும் உள்ளது என்ற மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவரின் கருத்தில் நான் உடன்படுகிறேன்.

எனினும், கூட்டத்  தொடருக்கான நிகழ்ச்சி நிரலில் உள்ள அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதால் இந்த தீர்மானத்தை நாம் விரைவுபடுத்த முடியாது. நம்மிடம் ஒன்பது நாடாளுமன்ற சிறப்புத் தேர்வுக் குழுக்கள் உள்ளன. அங்கு இவ்விவாரத்தை கொண்டுச் சென்றால் அதிக கால அவகாசம் எடுத்து விரிவாக விவாதிக்க முடியும். ஆகவே  இந்த தீர்மானத்தை  நான் நிராகரிக்கிறேன் என்றார் அவர்.

முன்னதாக, பெண்டோரா பேப்பர் அம்பலப்படுத்திய விவகாரங்களை விவாதிக்கக் கோரும் இந்த தீர்மானத்தை சபாநாயகர் விரைவுபடுத்த வேண்டும் என்று அன்வார் தனது உரையில் வலியுறுத்திருந்தார்.

 


Pengarang :