ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தடுப்பூசியை நிராகரிக்கும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை- மந்திரி புசார் எச்சரிக்கை

ஷா ஆலம், அக் 8- நியாயமான காரணம் ஏதுமின்றி கோவிட்-19 தடுப்பூசியை செலுத்திக் கொள்ள மறுக்கும் மாநில அரசு ஊழியர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்ட ஆலோசகர்களிடமிருந்து ஆலோசனையைப் பெற்றப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பில் அடுத்த வாரம் நடைபெறும் மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தடுப்பூசியை செலுத்திக் கொள்ள மறுக்கும்  பணியாளர்களுக்கு எதிராக எச்சரிக்கை, சம்பளப் பிடித்தம் மற்றும் வேலை நீக்கம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மருத்துவ காரணங்கள், சுகாதாரப் பிரச்சனை, மருத்துவர்களின் ஆலோசனை போன்ற காரணங்களைக் கொண்டிருப்போருக்கு இந்த ஒழுங்கு நடவடிக்கையிலிருந்து விலக்களிக்கப்படும் என்றும் அவர்  சொன்னார்.

சமயப் பள்ளி ஆசிரியர்கள், பள்ளிவாசல் நிர்வாகக் குழுவினர், திருமண பதிவாளர்கள் உள்பட 96 பேர் தடுப்பூசியை நிராகரித்தது குறித்து மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கடந்த மாதம் வருத்தம் தெரிவித்திருந்தார்.


Pengarang :