ORKINI
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மக்கள் பரிவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும்

கிள்ளான், அக் 10- கோவிட்-19 நோய்த் தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட சில தரப்பினருக்கு  உதவும் வகையில் மக்கள் பரிவுத் திட்டம் (ஐ.பி.ஆர்.) விரிவு படுத்தப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

வரும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அந்த திட்டத்திற்கு புது வடிவம் கொடுக்கப்பட்டவுடன் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட சில தரப்பினருக்கான உதவித் திட்டங்கள் அதில் சேர்க்கப்படும் என்று அவர் சொன்னார்.

மக்களின் சமூக  நல்வாழ்வுக்கு மாநில அரசு அளித்து வரும் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இந்த மக்கள் பரிவுத் திட்டத்திற்கு புதுவடிவம் கொடுக்கும் நடவடிக்கை அமைவதாக அவர் தெரிவித்தார்.

உண்மையில் இந்த திட்டத்தை இவ்வாண்டு மத்தியில் அமல்படுத்த திட்டமிட்டிருந்தோம். எனினும் கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக அவ்வாறு செய்ய இயலாமல் போய்விட்டது. அத்திட்டத்திற்கு புதுவடிவம் கொடுப்பது மற்றும் அதில் அடங்கிய அம்சங்கள் குறித்து வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்படும் என்றார் அவர்.

இங்குள்ள விண்ட்ஹம் தங்கும் விடுதியில்  2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் குறித்து சிலாங்கூர் மாநில சமூகத் தலைவர்களுக்கு விளக்கமளித்தபோது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ரொக்கமாகப் பணமாக வழங்கக்கூடிய புதிய திட்டத்திற்கு 5 முதல் 8 கோடி வெள்ளி வரை ஒதுக்கீடு செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Pengarang :