ECONOMYMEDIA STATEMENT

கம்போங் டுசுன் டுரியான் மின் விநியோகப் பிரச்சனை- குறுகியகால, நீண்டகாலப் தீர்வை மாநில அரசு ஆராயும்

ஷா ஆலம், அக் 11- மின்சார விநியோகப் பிரச்சனைக்குத் தீர்வு காணக் கோரி பந்திங், கம்போங் டுசுன் டுரியான் பகுதி மக்கள் சமர்ப்பித்த மகஜரை மந்திரி புசார் அலுவலகம் பெற்றது.

இதன் அடிப்படையில் இவ்விவகாரம் மீது ஆய்வு மேற்கொண்டு உரிய தீர்வு காணும்படி மந்திரி புசாரின் சிறப்பு அதிகாரியும் செந்தோசா சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் அவர்களை மந்திரி புசார் அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டார்.

பி.என்.பி. எனப்படும் பெர்பாடான் நேஷனல் பெர்ஹாட் நிறுவனத்தின் கடப்பாடு தொடர்பில் வீடமைப்பு மற்றும் நகர்ப்புற நல்வாழ்வுத்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயிலுடன் சந்திப்பு நடத்தப்பட்டதாக குணராஜ் சொன்னார்.

இதனைத் தொடர்ந்து  இப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக அங்குள்ள வீடுகளுக்கு 40,000 வெள்ளி செலவில் தனி மீட்டர்களை பொருத்துவதற்காக தெனாகா நேஷனல் பெர்ஹாட் நிறுவனத்தின் உதவி நாடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்விவகாரத்திற்கான தற்காலிகத் தீர்வாக ஜெனரேட்டர் இயந்திரம் மூலம் அப்பகுதியில்  மின்சார வசதி ஏற்படுத்துவதற்கு மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  கடந்த ஒரு மாத காலமாக மின்சாரம் இன்றி அவதியுறும் அங்குள்ள 23 குடும்பங்களுக்கு  தற்காலிக தீர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் அவர்.

அந்த பகுதிக்கு மக்களுக்கு அடிப்படை வசதிகள் முறையாக கிடைப்பதை உறுதி செய்வதற்காக கடந்த 9 ஆம் தேதி தாம் மேற்கொண்ட இரண்டாவது பயணத்தின் போது தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஹஸ்னுள் பகாருடினும் உடனிருந்ததாக குணராஜ் கூறினார்.

இவ்விவகாரத்திற்கு தீர்வு காண்பதில் தமக்கு முழு  ஒத்துழைப்பு நல்கி வரும் நகராண்மைக் கழக உறுப்பினர் ஹரிதாஸ், சமூக இயக்கவாதி கரு, தீபன் மற்றும் நடவடிக்கை மன்ற உறுப்பினர்களுக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

 


Pengarang :