ECONOMYMEDIA STATEMENTNATIONAL

“சித்தம்“ திட்டத்தின்  வழி 300க்கும் மேற்பட்டோர் பயன் பெற்றனர்

கோலா சிலாங்கூர், அக் 11- சித்தம் எனப்படும் சிலாங்கூர் இந்தியர் தொழில் ஆர்வலர் மையத்தின் வாயிலாக 300க்கும் மேற்பட்ட இந்திய தொழில் தொழில்முனைவோர் பயன்பெற்றனர்.

இருபது லட்சம் வெள்ளி செலவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட முதல் கட்டத் திட்டத்தில் இத்தரப்பினர் அனுகூலத்தைப் பெற்றதாக தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்முனைவோருக்கு வர்த்தகத்திற்கு தேவையான உபகரணங்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதற்கு  நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மற்றும் அவசரகாலப் பிரகடனம் போன்றவை காரணமாக அமைந்ததாக அவர் சொன்னார்.

விண்ணப்பதாரர்கள் பொறுமை காக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். சில உபகரணங்கள் சிலாங்கூருக்கு வெளியிலிருந்தது பெற வேண்டியிருந்தது. தற்போது மாநில எல்லைகளைக் கடக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் அந்த உபகரணங்களைத் தருவிக்கும் பணி விரைவுபடுத்தப்படும் என்றார் அவர்.

இங்குள்ள தாமான் ராஜா மூசாவில்  இன்று கால் நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள எம். விஸ்வநாத் என்பவருக்கு கால்நடைத் தீவிர தயாரிப்பு இயந்திரத்தை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த சித்தம் திட்டத்திற்கு ஆண்டுக்கு பத்து லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் ஹிஜ்ரா சிலாங்கூர் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம் என்றும் அவர் சொன்னார்.

வியாபாரத்தில் ஈடுபாடு கொண்ட இந்திய தொழில்முனைவோருக்கு வழிகாட்டுதல், கடனுதவி மற்றும் வர்த்தக உபகரணங்கள் வழங்கும் இத்திட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்த சித்தம் அமைப்பின் வாயிலாக தொழில்முனைவோர் மேம்பாடு பயிற்சி, திறன் மற்றும் தயாரிப்பு பயிற்சி, க்ரோ எனப்படும வர்த்தக வழிகாட்டித் திட்டம், கிரான் எனப்படும் வர்த்தக உபகரண உதவித் திட்டம் ஆகியவை நான்கு திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன.


Pengarang :