ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரில் இவ்வாண்டு 11 உணவு விநியோகிப்பாளர்கள் சாலை விபத்துகளில் மரணம்

பெட்டாலிங் ஜெயா, அக் 12-  சிலாங்கூர் மாநிலத்தில் இவ்வாண்டு  உணவு மற்றும் பொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள மோட்டார் சைக்கிளோட்டிகளில் 11 பேர் சாலை விபத்துகளில் பலியாகியுள்ளனர்.

இவ்வாண்டு ஜனவரி முதல் ஆகஸ்டு மாதம் வரை சிலாங்கூரில்  88 உணவு விநியோகிப்பாளர்கள்  சாலை விபத்துகளில் சிக்கிய வேளையில் அவர்களில்  11 பேர் உயிரிழந்ததாக  மாநில சாலை போக்குவரத்து இலாகா இயக்குநர் நஸ்லி முகமது தாய்ப் கூறினார்.

இவ்விபத்துகளில் 12 பேர் கடுமையாக காயமுற்றதோடு 65 பேர் லேசான காயங்களுக்குள்ளாயினர் என்று அவர் சொன்னார்.

இன்று இங்குள்ள மோட்டார் சைக்கிளுக்கான தடத்தில் ஓப்ஸ் மேரா எனும் சிறப்பு சோதனை நடவடிக்கையை  பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

புக்கிட்  அமான் போக்குவரத்து துறையிடமிருந்து இந்த தரவுகள் கிடைக்கப்பெற்றதாக கூறிய அவர், நாட்டிலேயே சிலாங்கூரில்தான் அதிகளவில் மரணச் சம்பவங்கள் நிகழ்வது  கவலையளிப்பதாக உள்ளது என்றார்.

நாடு முழுவதும் இந்த மின்-அழைப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் சம்பந்தப்பட்ட 36 மரணச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ள வேளையில்   அவற்றில் 11 சம்பவங்கள் சிலாங்கூரில் நிகழ்ந்துள்ளன. கடுமையான காயங்களுக்குள்ளான 31 பேரில் 12 பேரும் இம்மாநிலத்தைச் சேர்ந்தவர்களாவர் என அவர் மேலும் கூறினார்.

அதிகரித்து வரும் விபத்துக்களை கருத்தில் கொண்டு தமது துறை ஓப்ஸ் மேரா சோதனை நடவடிக்கையை இம்மாதம் 8 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 7 ஆம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

 


Pengarang :