MEDIA STATEMENTNATIONALSELANGOR

மலாக்கா சட்டமன்றத்தை கலைக்கும் முடிவை பக்கத்தான் நிராகரித்தது

ஷா ஆலம், அக் 13- மலாக்கா மாநில சட்டமன்றத்தைக் கலைக்கும் முடிவை பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி நிராகரித்தது. கோவிட்-19 நோய்த் தொற்று பிரச்சனையை நாடு இன்னும் எதிர்நோக்கியுள்ள வேளையில் அத்தகைய முடிவை எடுப்பது அரசியலமைப்புக்கு முரணானது என்று அது கூறியது.

மாநில சட்டமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை  கூட்டணி கட்சிகள் பெற்றிருப்பதும்  சட்டமன்றக் கலைப்புக்கு எதிரான நிலைப்பாட்டை தாங்கள் எடுப்பதற்கான மற்றொரு காரணமாகும் என்று பக்கத்தான் ஹராப்பான் தலைமைத்து மன்றம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

இதன் அடிப்படையில், மலாக்காவின் பராமரிப்பு முதலமைச்சராக டத்தோஸ்ரீ சுலைமான் முகமது அலி நியமிக்கப்பட்டதை பக்கத்தான் நிராகரிப்பதாகவும் அவ்வறிக்கை தெரிவித்தது.

மலாக்கா மாநில சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னதாகவே டத்தோஸ்ரீ சுலைமான் உறுப்பினர்களின் ஆதரவை இழந்து விட்டார் என்பதோடு மாநில அரசாங்கத்திற்கு தலைமையேற்கும் தகுதியையும் அவர் இழந்து விட்டார் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

இந்த கூட்டறிக்கையில் கெஅடிலான் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அமானா கட்சித் தலைவர் முகமது சாபு, ஜசெக  தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், அப்கோ கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ மேடியஸ் தங்காவ் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

சட்டமன்றத்தைக் கலைக்கும் முடிவை எடுப்பதற்கு முன்னதாக மாநில அரசின் தலைமைச் செயலாளர், பெரும்பான்மை உறுப்பினர்கள் அணியின் தலைவர் அட்லி ஜஹாரி, சிறுபான்மை உறுப்பினர்கள் அணியின் தலைவர் டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஹருண் ஆகியோருடன் கலந்து பேசி அப்பொறுப்பை வகிப்பவரை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என்றும் பக்கத்தான் கூறியது.

பேராக் மாநிலத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டிலும் இதே மலாக்காவில் கடந்தாண்டிலும் நடந்ததைப் போல் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு உள்ள அணிக்கே மாநில அரசை வழிநடத்தும் அதிகாரம் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று அது மேலும் குறிப்பிட்டது.

 


Pengarang :