ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 அலை இன்னும் ஓயவில்லை- எஸ்.ஒ.பி. விதிகளை தொடர்ந்து கடைபிடிக்க நோர் ஹிஷாம் கோரிக்கை

கோலாலம்பூர், அக் 13- கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டம் இன்னும் ஓயவில்லை. மலேசியா புதிய வியூகத்துடன் எண்டமிக் கட்டத்தை  அல்லது புதிய போர்க்களத்தை நோக்கி தற்போது பயணிக்கிறது என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

புதிதாக பல தளர்வுகளும் மாநில எல்லைகளைக் கடப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தொடர்ந்து எஸ்.ஒ.பி. விதிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்பதோடு புதிய இயல்பையும் அமல்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலகிலுள்ள பல நாடுகளைப் போலவே நாமும் பேரிடரிலிருந்து வெற்றிகரமாக மீண்டு விட்டோம். எனினும், அபாயத்திலிருந்து நாம் இன்னும் முழுமையாக விடுபடவில்லை. மலேசியர்கள் அனைவரும் ஒன்றுபட்டு எஸ்.ஒ.பி. விதிகளை கடைபிடிக்கும் பொறுப்பை முறையாக நிறைவேற்றும் பட்சத்தில் இந்த போரிலிருந்து  நாம் விடுபட முடியும் என்று அவர் சொன்னார்.

கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து நாடு விடுபடுவதை உறுதி செய்ய ஒவ்வொரு மலேசியரும் உரிய பங்கினை ஆற்ற வேண்டும். இவ்விவகாரத்தில் அமைச்சின் கோட்பாடுகள் தெளிவானவை என்பதோடு அதனை அமல்படுத்தும் பொறுப்பு மக்களிடம் உள்ளது என்றார் அவர்.

உலகம் இனி முன்பு போல் இருக்காது. நமது ஒவ்வொரு நடவடிக்கையும் சமூகத்தில் கோவிட்-19 நோய்த் தொற்றைக் கையாள்வதில் விளைவுகளை ஏற்படுத்தும். புதிய இயல்பில் வாழ்வதற்கு  நாம் நம்மை தயார் படுத்தியும் பழக்கப்படுத்தியும் கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தர்.

 


Pengarang :