ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பேரிடர்களை எதிர்கொள்ள சுபாங் ஜெயா மாநகர் மன்றம் தீவிர நடவடிக்கை

ஷா ஆலம், அக் 14- வடமேற்கு பருவ மழையை எதிர்கொள்வதற்கு ஏதுவாக பயிற்சி நடவடிக்கைள் மற்றும் அவசரகால உதவி உபகரணங்களை சோதிக்கும் பணியில் சுபாங் ஜெயா மாநகர் மன்றம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அலுமினியம் மற்றும் ரப்பர் படகுகள், ஜெனரேட்டர் இயந்திரங்கள், நீர் அழுத்தக் கருவிகள் ஆகியவற்றை சோதனையிடும் பணியில் பந்தாஸ் எனப்படும் அதிரடி நடவடிக்கை பிரிவின் 37 உறுப்பினர்களும் 10 தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டு வருவதாக மாநகர் மன்றத்தின் வர்த்தகத் தொடர்பு பிரிவின் துணைத் இயக்குநர் அஸ்ஃபரிசால் ரஷிட் கூறினார்.

தற்காலிக நிவாரண மையங்களாக செயல்படக் கூடிய மண்டபங்கள், பாலாய் ராயா போன்ற இடங்களும் வாகனங்கள், தற்காலிக கூடாரங்கள் போன்ற தளவாடங்களும் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைககள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.

அழைப்புகளுக்கு பதிலளிப்பதற்கு ஏதுவாக கட்டுப்பாட்டு மையத்திலுள்ள நடவடிக்கை அறையை காலை 8.00 மணி முதல் இரவு 10.00  மணி வரை திறப்பதற்கு தாங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், எனினும், மாநில அரசின் அனுமதியைப் பொறுத்து இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.

நான்கு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள நீர் மட்ட எச்சரிக்கை முறை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்பதோடு அதன் தொடர்பான விபரங்கள் சமூக ஊடகங்கள் வாயிலாக  அவ்வப்போது பகிர்ந்து கொள்ளப்படும் என்றார் அவர்.

சுபாங் ஜெயா மாநகர் மன்றப் பகுதியில் வெள்ளம் ஏற்படும் சாத்தியம் உள்ள 19 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள வேளையில் அப்பகுதிகளில் உள்ள வடிகால்கள் முறையாக பராமரிக்கப்படுவதை உறுதி செய்யும் பணியில் குத்தகையாளர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 


Pengarang :