ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நோர்ஹிஷாம் மலாக்கா தேர்தல் வேட்பாளர் அல்ல- ஹராப்பான் கூட்டணி முடிவு

ஷா ஆலம், அக் 22- மலாக்கா தேர்தலில் டத்தோ நோர்ஹிஷாம் ஹசான் பக்தீயை தங்கள் வேட்பாளராக நிறுத்துவதில்லை என்று பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி முடிவு செய்துள்ளது.

அந்த பெங்காலான் பத்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான இம்முடிவை அக்கூட்டணி நேற்று அறிக்கை வாயிலாக வெளியிட்டது.

மேலும் நான்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களும் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் எந்த கட்சியிலும் உறுப்பினர்களாக இல்லாததால் அவர்கள் குறித்து பக்கத்தான் கூட்டணியின் தலைவர் மன்றக் கூட்டத்தில்  விவாதிக்கப்படவில்லை என்றும் அது கூறியது.

அந்த நான்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பான விவகாரத்தில் அனைத்து உறுப்புக் கட்சிகளும் வெளியிட்ட கருத்தை தலைவர் மன்றம் கேட்டறிந்தது. தனி மனிதர் நலனை விட மக்களின் நலனே முக்கியம் என்பதை அது வலியுறுத்த விரும்புகிறது என்று அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டது.

மலாக்கா மாநில தேர்தல் இயந்திர தலைவராக மலாக்கா மாநில ஹராப்பான் கூட்டணித் தலைவர் அட்லி ஜஹாரியை நியமிக்கவும் தலைவர் மன்றம் இணக்கம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, நோர்ஹிஷாம் பக்கத்தான் சார்பாக போட்டியிடுவதை தாங்கள் எதிர்ப்பதாக ஜசெக தலைவர் லிம் குவான் எங் கூறியிருந்தார். இவ்விவகாரத்தை தாங்கள் தலைவர் மன்றக் கூட்டத்தில் எழுப்பவுள்ளதாகவும் அவர்  தெரிவித்திருந்தார்.

கடந்த 14வது பொதுத் தேர்தலில் ஜசெக சார்பில் போட்டியிட்டு வென்ற நோர்ஹிஷாம் கடந்தாண்டு மார்ச் மாதம் அம்னோ ஆட்சியமைப்பதற்கு ஏதுவாக அக்கட்சியிலிருந்து வெளியேறி சுயேச்சை உறுப்பினராக பிரகடனப்படுத்திக் கொண்டார்.

 


Pengarang :