ACTIVITIES AND ADSECONOMYMEDIA STATEMENTYB ACTIVITIES

தீபாவளியை முன்னிட்டு  3,500 உணவுப் பொட்டலங்கள் விநியோகம்-கணபதிராவ் தகவல்

ஷா ஆலம், அக் 22– அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  மாநிலம் முழுவதும் உள்ள இந்திய சமூகத்திற்கு 3,500 உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்படுகின்றன.

குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவினரை இலக்காக கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்திற்கு 192,000 வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக  சமூக நலத்துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.

இந்த உணவுப் பொட்டலங்களை சம்பந்தப்பட்ட குடும்பங்களிடம் ஒப்படைக்கும் பணியை சமூகத் தலைவர்கள் மேற்கொள்வர் என்று அவர் சொன்னார்.

தலா 55 வெள்ளி மதிப்பிலான இந்த உணவுப் பொட்டலங்களில் தீபாவளியின் போது பாரம்பரிய பலகார வகைகளை தயாரிப்பதற்கு தேவையான பொருள்கள் அடங்கியுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

கடந்த ஈராண்டுகளாக நாட்டை உலுக்கி வரும் கோவிட்-19 பெருந்தொற்று குறிப்பிட்ட ஒரு இனத்தை மட்டும் பாதிக்கவில்லை. மாறாக, உலக பொருளாதாரத்தை முடக்கி, அனைத்து தரப்பினரின் வேலை வாய்ப்புகளையும் வருமானத்தையும் பாதித்துள்ளது என்றார் அவர்.

இந்த உணவுப் பொருள் உதவித் திட்டம் சம்பந்தப்பட்ட குடும்பங்களின் பொருளாதார சுமையை ஓரளவு குறைக்க உதவும் என நம்புகிறோம். தீபாவளியை மிதமான அளவில் அதே வேளையில் மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கும் இது வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே, இவ்வாண்டு பெரிய அளவில் தீபாவளி பொது உபசரிப்பு நடத்தப்படாது என்றும் கணபதிராவ் கூறினார்.

தேசிய மீட்சித் திட்டத்தின் நான்காம் கட்டத்திற்கு கிள்ளான் பள்ளத்தாக்கு மாறிய போதிலும்  மாநில நிலையிலான தீபாவளி பொது உபசரிப்பு இம்முறை நடைபெறாது. கோவிட்-19 பெருந்தொற்று பரவலை கருத்தில் கொண்டு இம்முடிவை எடுக்க வேண்டியுள்ளது. மேலும், இத்தகைய உபசரிப்பு நிகழ்வுகளை நடத்துவதற்கு குறைந்து இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பாகவே  ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். தற்போதைய சூழலில் அதற்கான கால அவசாசமும் நமக்கு இல்லை என்றார் அவர். 


Pengarang :