ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மித்ரா நிதி முறைகேடு- 16 நிறுவன இயக்குநர்களை எம்.ஏ.சி.சி . கைது செய்தது

கோலாலம்பூர், அக் 26- மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவான மித்ராவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக நம்பப்படும் 16 நிறுவன இயக்குநர்களை எம்.ஏ.சி.சி, எனப்படும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நேற்றிரவு கைது செய்தது.

கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்றிரவு தொடங்கி மேற்கொள்ளப்பட்ட மாபெரும் சோதனை நடவடிக்கையில் அந்த சந்தேகப் பேர்வழிகள் கைது  செய்யப்பட்ட்டதாக எம்.ஏ.சி.சி. வட்டாரம் கூறியது.

மலேசியாவிலுள்ள இந்திய சமூகத்தின் சமூக பொருளதாரத்தை உயர்த்தப் போவதாகக் கூறி மித்ராவிடமிருந்து பல கோடி வெள்ளியை பெற்ற இக்கும்பல் பின்னர் அப்பணத்தை கபளீகரம் செய்து விட்டதாக அவ்வட்டாரம் மேலும் தெரிவித்தது.

கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரையிலான மித்ரா நிதிக்கான விண்ணப்பங்கள் மற்றும் செலவுகளை இந்த விசாரணை முழுமையாக உள்ளடக்கியிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்திய சமூகத்தின் பொருளாதாரத்தை உயர்த்தப் போவதாக க் கூறி மித்ராவிடமிருந்து தனி நபர்கள், நிறுவனங்கள் மற்றும் அறவாரியங்கள் பெற்ற நிதியில் 60 விழுக்காடு வரை இலக்காகக் கொள்ளப்பட்ட தரப்பினரை சென்றடையவில்லை என்றும் நம்பப்படுகிறது.

மித்ராவிடமிருந்து பெறப்பட்ட நிதியை சில தரப்பினர் தங்களின் சுய நலனக்காக துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்று எம்.ஏ.சி.சி. வட்டாரம் மேலும் கூறியது.

கடந்த 2018 ஆம் ஆண்டில் பக்கத்தான் அரசங்கத்தால் மறுசீரமைப்பு செய்யப்பட்ட மித்ரா அமைப்பு பிரதமர் துறையின் கீழ் வைக்கப்பட்டது. 

பின்னர் கடந்த 2020 ஆண்டில் அந்த பிரிவின் நடவடிக்கைகள் தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டன. இந்திய சமூகத்தை மேம்படுத்தும் திட்டங்களை மேற்கொள்வதற்காக மித்ராவுக்கு ஆண்டு தோறும் 10 கோடி வெள்ளி மானியம் வழங்கப்படுகிறது.

 


Pengarang :