ECONOMYPBT

சட்டவிரோதமாக குப்பை கொட்டிய 10 லோரிகள் பறிமுதல்- எம்.பி.கே.ஜே. நடவடிக்கை

காஜாங், அக் 28- சட்டவிரோதமாக குப்பைகளை கொட்டிய காரணத்திற்காக  அக்டோபர் மாதத்தில் 10 லோரிகளை காஜாங் நகராண்மைக் கழகம் பறிமுதல் செய்தது.

இதற்கு முந்தைய மாதங்களைக் காட்டிலும் இம்மாதத்தில்தான் அதிகமான பறிமுதல் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நகர மற்றும் சுகாதார சேவைத் துறை மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கைகளில் இந்த லோரிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக காஜாங் நகராண்மைக் கழகத் தலைவர் நஜ்முடின் ஜெமாய்ன் கூறினார்.

ஜாலான் குவாரி சுங்கை லோங்கில் நான்கு லோரிகளும் தாமான் புசாரா டிவின் பால்ம்ஸ் மற்றும் புக்கிட் அம்பாங்கில் தலா இரு லோரிகளும் கம்போங் சிம்பாங் பாலாக் மற்றும் இதர இடங்களில் தலா ஒரு லோரியும் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் சொன்னார்.

மேலும், சுற்றுச்சூழலை மாசுபடுத்திய குற்றத்திற்காக 17 குற்றப்பதிவுகளும் இக்காலக்கட்டத்தில் வெளியிடப்பட்டதாக அவர்  தெரிவித்தார்.

மக்களின் தரமான மற்றும் சுகாதாரமான வாழ்க்கையை உறுதி செய்வதற்காக இத்தகைய சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

இவ்வாண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய அதிரடி சோதனை நடவடிக்கைகள் வாயிலாக இதுவரை சட்ட விரோதமாக குப்பைகளைக் கொட்டிய 51 லோரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


Pengarang :