டான்ஸ்ரீ ஜே.ஜே. ராஜ் மறைவு-  சுல்தான் தம்பதியர் அனுதாபம்

ஷா ஆலம், நவ 8-  முன்னாள் சிலாங்கூர் போலீஸ் டான்ஸ்ரீ ஜே.ஜே. ராஜ் (ஜே.ஆர்.)  மறைவுக்கு மேன்மை சிலாங்கூர்  சுல்தான் மற்றும் சிலாங்கூர் துங்கு பெர்மைசூரி தம்பதியர் தங்களின் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளனர்.

ஓய்வு பெற்ற உயர் போலீஸ் அதிகாரியான ஜே.ஜே. ராஜ் தனது 100 வது வயதில் இருதய நோய் காரணமாக காலமானதை அறிந்து தாங்கள் வருந்துவதாக சுல்தான் ஷராபுடீன் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் மற்றும் துங்கு பெர்மைசூரி நோராஷிகின் தம்பதியர் தெரிவித்தனர்.

1973 ஆம் ஆண்டில் சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவராக பணியாற்றிய போது மறைந்த சுல்தான் சலாவுதீன் அப்துல் அஜீஸ் ஷாவுடன் அணுக்கமான நட்புறவைப் பேணி வந்தாக முகநூல் வாயிலாக அரண்மனை வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

அன்னாரின் சேவைக்காக மறைந்த சுல்தான் சலாவுடின் 1980 ஆம் ஆண்டில் டத்தோ என்ற அந்தஸ்து கொண்ட 'ஸ்ரீ செந்தோசா செத்தியா டிராஜா' என்ற விருதை அவருக்கு வழங்கினார்.

1921ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி பிறந்த இவர், பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஆரா டமன்சாரா மருத்துவ மையத்தின் தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று அதிகாலை 1.55 அளவில் மரணமடைந்தார்.

கடந்த 1946 ஆண்டு காவல்துறையில் பயிற்சி ஆய்வாளராகச் சேர்ந்தார்.  1950 இல் புக்கிட் கெபோங் காவல் நிலையத் தாக்குதலின் போது பாகோ காவல்துறைத் தலைவராக பணியாற்றினார்.

தங்காக் காவல்துறைத் தலைவர் (1952), கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் (1958), பகாங் காவல்துறைத் தலைவர் (1961), நெகிரி செம்பிலான் காவல்துறைத் தலைவர் (1967) மற்றும் 1974 இல் புக்கிட் அமான் நிர்வாக இயக்குநர் உட்பட பல முக்கியப் பதவிகளை அவர் வகித்துள்ளார்.

 மறைந்த சுல்தான் சலாவுதீன் அப்துல் அஜிஸ் ஷா அல்ஹாஜுக்கு நெருக்கமான இவர், 1973 ஆம் ஆண்டு சிலாங்கூர் காவல்துறைத் தலைவராகவும் பணியாற்றினார்.

 1950 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் தாக்குதலின் போது புக்கிட் கெபோங் காவல் நிலையத்தில் உள்ளவர்களைக் காப்பாற்றுவதற்காக அமைக்கப்பட்ட ஸ்குவாட் ஹரிமாவ் படைக்கு தலைமை தாங்கியமைக்காக இவர் மாவீரராகப் போற்றப்படுகிறார்.

Pengarang :