ECONOMYMEDIA STATEMENTPBT

அனைத்து ஊராட்சி மன்றப் பகுதியிலும் மறுசுழற்சி மையங்கள்-மாநில அரசு திட்டம்

சிப்பாங், நவ 8- அனைத்து ஊராட்சி மன்றங்களிலும்  மறுசுழற்சி மையங்களை அமைப்பதற்கான பொருத்தமான இடங்களை கண்டறியும் முயற்சியில் சிலாங்கூர் அரசு ஈடுபட்டு வருகிறது.

குப்பை கொட்டும் மையங்களில் சேரும் குப்பைகளின் அளவைக் குறைப்பதற்கும் ஊராட்சி மன்றங்களின் செலவைக் கட்டுப்படுத்துவதற்கும் இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார். 

தற்போது  கிள்ளானிலுள்ள மேரு மற்றும் பண்டார் புக்கிட் பூச்சோங்கில் இரு மறுசுழற்சி மையங்கள் உள்ளன. இந்த இரண்டு மறுசுழற்சி மையத் திட்டங்களும் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது.

தற்போது அனைத்து ஊராட்சி மன்றப் பகுதிகளிலும் இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு  பொருத்தமான இடங்களைத் தேடி வருகிறோம்  என்று அவர் கூறினார்.

சிப்பாங் நகராண்மைக் கழகத்தின் கோத்தா வாரிசான் மண்டலத்தின்  குடியிருப்போர்  பிரதிநிதிகள் குழு (ஜே.பி.பி.) ஏற்பாடு செய்திருந்த மீண்டும் பள்ளிக்கு திரும்புவோம் எனும் நிகழ்ச்சிக்கு தலைமையேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதற்கிடையே. சுகாதாரம் மற்றும் 3ஆர் திட்டத்தை அமல்படுத்துவதில் (குப்பை குறைப்பு, மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி)  சமூகத்தின் விழிப்புணர்வு அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.

குடியிருப்பாளர்கள், குடியிருப்பு பிரதிநிதிகள் மன்றம் மற்றும் குடியிருப்பாளர்கள் குழு பல்வேறு பெயர்கள் பயன்படுத்தப்பட்டாலும்  3ஆர் திட்டங்களின்  இலக்கு ஒன்றாகத்தான் உள்ளது என்றார் அவர்.

 சுற்றுச்சூழலை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு சமூகத்தில் ஏற்படுத்தப்பட  வேண்டும் என்று அவர் சொன்னார் .

Pengarang :