ECONOMYMEDIA STATEMENTSELANGOR

மந்திரி புசார், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதமாக இருந்தாலும் கவனமாக ஆராயுங்கள்- அரசு ஊழியர்களுக்கு நினைவுறுத்து

ஷா ஆலம், நவ 8- பணிகளை ஆற்றும் போது வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புணர்வை மீறாத வகையில் சட்ட நெறிகளுக்கு உட்பட்டு செயல்படும்படி அரசு ஊழியர்களுக்கு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நினைவுறுத்தியுள்ளார்.

அந்த கோட்பாடுகளுக்கு எதிராகவும் பணி நெறிகளுக்கு முரணான முறையிலும் அரசு ஊழியர்களுக்கு உத்தரவை பிறப்பிக்க வேண்டாம் என்று தாம் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களைத் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அவர் சொன்னார்.

தாமும் ஆட்சிக்குழு உறுப்பினர்களும் கையெழுத்திட்ட ஆதரவுக் கடிதங்கள் விஷயத்திலும் இந்த உத்தரவு பொருந்தும் என்று அவர் தெரிவித்தார்.

மந்திரி புசார் அல்லது ஆட்சிக்குழு உறுப்பினரின் கையெழுத்தைக் கண்டவுடன் அதனை அங்கீகரித்து விட வேண்டும் என எண்ண வேண்டாம். சில வேளைகளில் நாங்கள் குறிப்புகளை எழுதியிருப்போம். அதனை கவனமாக பரிசீலியுங்கள் என்று அவர் சொன்னார்.

கையெழுத்தைக் கண்டவுடன் அதனை அங்கீகரிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வரவேண்டாம். அவ்வாறு செய்வது உசிதமல்ல. அனைவரும் கோட்பாடுகளை தற்காக்க வேண்டும் என்றார் அவர்.

சிலாங்கூரை வளர்ச்சியடைந்த  மாநிலமாக மாற்றுவதற்கான இலக்கை அடைவதற்கு ஏதுவாக மனவுறுதியும் எதையும் தாங்கும் இதயமும் கொண்டவர்களாக அரசு பணியாளர்கள் இருப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 


Pengarang :