ECONOMYMEDIA STATEMENTSELANGOR

2022 பட்ஜெட்டில் நலத் திட்டங்களுக்கான ஒதுக்கீடு நிலைநிறுத்தப்படும்- சுங்கை ராமால் உறுப்பினர் நம்பிக்கை

ஷா ஆலம், நவ 9– மக்களுக்கு தொடர்ந்து சேவைகளை வழங்குவதற்கு ஏதுவாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீடு தொடர்ந்து நிலை நிறுத்தப்படும் என்று சுங்கை ராமால் சட்டமன்ற உறுப்பினர் தனது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கோவிட்-19 பெருந்தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட போதிலும் மக்களில் பெரும்பாலோர் அன்றாட  வாழ்க்கையை நடத்துவதற்கு பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக மஸ்வான்  ஜோஹார் கூறினார்.

தங்களிடமுள்ள நிதி ஒதுக்கீட்டைக் கொண்டு மக்களுக்கு உடனடியாக உதவி செய்வதற்குரிய கூடுதல் அனுகூலம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளது. மற்ற அரசு துறைகளாக இருப்பின், நிதி ஒதுக்கீட்டை அங்கீகரிப்பதற்கு முன்னர் பல்வேறு வழிமுறைகளை கடைபிடித்தாக வேண்டிய நிர்பந்தம் உள்ளது என்றார் அவர்.

இந்த  நிதி ஒதுக்கீடு அதிகரிப்படாவிட்டாலும் பாதகமில்லை. தற்போது வழங்கப்படும் ஒதுக்கீடு நிலைநிறுத்தப்பட்டால் கூட மக்களின் சுமையை குறைக்கும் திட்டங்களை மேற்கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.

தற்போது வகுப்புகள் இணையம் வாயிலாக நடத்தப்படுவதால் கற்றல் தொடர்பான பிரிவுக்கு உதவிகள் வழங்குவது தொடர்பில் 2022 வரவு செலவுத் திட்டத்தில் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை இம்மாதம் 26 ஆம் தேதி மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார்.


Pengarang :