ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் அரசின் தடுப்பூசித் திட்டம் சரியான நடவடிக்கை- மந்திரி புசார் பெருமிதம்

ஷா ஆலம், நவ 13- இருபது கோடி வெள்ளி நிதி ஒதுக்கீட்டில் கடந்த ஜூன் மாதம் அமல்படுத்தப்பட்ட செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டம் சிலாங்கூர் அரசின் சரியான நடவடிக்கையாக அமைந்துள்ளது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சிலாங்கூர் அரசு சொந்தமாக தடுப்பூசியை வாங்கும் என கூறிய போது பலர் எங்களை கேலி செய்து எள்ளிநகையாடினர். ஆனாலும் மாநில அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து அத்திட்டத்தை நிறைவேற்றியது. இப்போது அந்த நடவடிக்கையை எல்லோரும் பாராட்டுகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

பல்வேறு விஷயங்களில் நாங்கள் ஏளனத்திற்கும்  கேலிக்கும் ஆளாகியிருக்கிறோம். எனினும் நாங்கள் செய்வது சரியானதாகவும் சட்ட வரம்புக்குட்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக  பொறுமையுடனும் மனவுறுதியுடனும் குறிக்கோளுடனும் செயல்பட்டு வந்தோம் என்று அவர் குறிப்பிட்டார்.

தடுப்பூசியைப் பெறுவதற்கு பிற மாநிலங்கள் காத்திருந்த போது 20 கோடி வெள்ளி ஒதுக்கீட்டில் சொந்தமாக தடுப்பூசியை வாங்கும் திட்டத்தை நாம் அறிவித்தோம். நமது தடுப்பூசி இயக்கம் நோய்த் தொற்றிலிருந்து மீள்வதை விரைவுபடுத்தியதோடு தேசிய மீட்சித் திட்டத்தின் நான்காம் கட்ட கட்டத்திற்கு மாறவும் உதவியது என்றார் அவர்.

அண்மையில் இங்கு நடைபெற்ற அரசு ஊழியர்களின் மாதாந்திர சந்திப்பு நிகழ்வில் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை அவர் சமூக ஊடகங்களில் அவர் பதிவேற்றம் செய்திருந்தார்.

சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டம் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்ட அமலாக்த்தை விரைவுபடுத்துவதற்கு பெரிதும் துணை புரிந்ததோடு சுமார் 75 விழுக்காட்டினர் தடுப்பூசி பெறுவதற்கும் உதவியாக அமிருடின் சொன்னார்.

 


Pengarang :