EVENTHEALTHMEDIA STATEMENTNATIONAL

தேர்தல் பணியாளருக்கு நோய் பீடிப்பு- தொடர்பில் இருந்த 23 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்

மலாக்கா, நவ 13- கோவிட்-19 நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட அரசியல் கட்சியின் தேர்தல் பணியாளர் ஒருவருடன் தொடர்பில் இருந்த 23 பேர் அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

அந்த 23 பேரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாக மலாக்கா மாநில சுகாதார இயக்குநர் டாக்டர் ருஸ்டி அப்துல் ரஹ்மான் கூறினார்.

பகாங்கை சேர்ந்த அந்த தேர்தல் பணியாளர் மலாக்கா தேர்தலில் தனது கட்சியின் தேர்தல் இயந்திரத்திற்கு உதவுவதற்காக கடந்த நவம்பர் முதல் தேதி தொடங்கி இங்கு தங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட பகுதியில் நோய்த் தொற்று பரவும் அபாயத்தை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட தேர்தல் நடவடிக்கை அறையை நேற்று தொடங்கி மூடும்படி தாங்கள் உத்தரவிட்டுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.

 நோய்த் தொற்றுக்கான அறிகுறி தென்பட்டதைத் தொடர்ந்து கடந்த 9 ஆம் தேதி  தனியார் கிளினிக் ஒன்றில் அந்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆர்டிகே-ஏஜி சோதனையில் கோவிட்-19 உறுதி செய்யப்பட்டது. தற்போது ஆர்.டி.-பிசிஆர் சோதனையின் முடிவுக்காக காத்திருக்கிறோம். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் வீட்டில் தங்கியிருந்தவர்களை சோதனை மேற்கொள்ளவும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும் உத்தரவிட்டுள்ளோம் என்றார் அவர்.

இதனிடையே, நிர்ணயிக்கப்பட்ட எஸ்.ஒ.பி. விதிமுறைகளைக் கடைபிடிக்கத் தவறியதற்காக சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிக்கு 10,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

 


Pengarang :