Datuk Arjunaidi Mohamed
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சுங்கத் துறை உறுப்பினர் காருக்கு எரியூட்டினர்- ஐவர் கைது

சிப்பாங், நவ 19- அரச மலேசிய சுங்கத் துறையின் கோலக் கிள்ளான் கிளையில் பணியாற்றும் பணியாளர் ஒருவரின் காருக்கு தீயிட்டதாக நம்பப்படும் ஐந்து ஆடவர்களை போலீசார் கிள்ளான் வட்டாரத்தில் நேற்றிரவு கைது செய்தனர்.

முப்பது முதல் அறுபது வயது வரையிலான அந்த ஐவரும் தீயிடல் மூலம் கீழறுப்புச் செயலில் ஈடுபட்டது தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 435 பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அர்ஜூனைடி முகமது கூறினார்.

அந்த ஐவரும் குற்றப் பதிவுகள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்று சிப்பாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

நேற்று இரவு 11.00 மணியளவில் தாமான் பண்டமாரான் பெர்மாயில் உள்ள கார் கழுவும் மையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புரோட்டோன் எக்ஸ் 70 ரக கார் தீயிடப்பட்டது. இச்சம்பவத்தில் அக்கார் 90 விழுக்காடு சேமடைந்தது.

தனது கார் மீது சாயம் வீசப்பட்டது தொடர்பில் 50 வயதுடைய அந்த சுங்கத் துறை பணியாளர் கடந்த 18 ஆம் தேதி புகார் செய்திருந்ததாக கூறிய அர்ஜூனைடி, அந்த சாயத்தை அகற்றுவதற்காக கார் கழுவும் மையத்திற்கு காரை கொண்டுச் சென்றிருந்த போது அது தீயிடப்பட்டது தொடர்பில் அந்நபரிடமிருந்து மற்றொரு புகார் கிடைக்கப்பெற்றதாக சொன்னார்.

அப்புகாரைத் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் இச்சம்பத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ஐந்து ஆடவர்களை விசாரணைக்காக தடுத்து வைத்துள்ளனர் என்றார்.


Pengarang :