ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

தரவுகளைச் சேகரிப்பதில் பல்வேறு தரப்பினருடன் “செலங்கா“ ஒத்துழைப்பு

கோலாலம்பூர், நவ 22- பொது இடங்களில் பாதுகாப்பாக நுழைவதை உறுதி செய்யும் நோக்கில் சிலாங்கூர் அரசினால் உருவாக்கப்பட்ட செலங்கா செயலி, தரவுகளை திரட்டுவதில் பல்வேறு தரப்பினருடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் பங்காளியாக செயல்படும் மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகம் மனநல ஆரோக்கியத்தை கண்டறிவதில் உதவியுள்ளதாக செலங்கா திட்ட இயக்குநர் டாக்டர் ஹெல்மி ஜக்காரியா கூறினார்.

மக்களின் சுகாதார நிலை தொடர்பான ஆய்வுகளை எதிர்காலத்தில் சுய பாதுகாப்புக்கான தரவுகளாக மாற்றுவதற்குரிய வாய்ப்பினை இந்த முயற்சி ஏற்படுத்தும் எனத் தாங்கள் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்கு நடைபெற்ற 2021 ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் சுகாதார மாநாட்டில் இவர் இதனைத் தெரிவித்தார்.

இம்மாதம் 18 ஆம் தேதி தொடங்கி நான்கு நாட்கள் கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற சிப்ஸ் எனப்படும் சிலாங்கூர் அனைத்துலக வர்த்தக மாநாட்டின் ஒரு பகுதியாக இந்த சுகாதார மாநாடு நடத்தப்பட்டது.

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் மற்றும் அதனைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைத் தொடர்ந்து மக்களின் நடமாட்டத்தைக் கண்காணிப்பதற்காக கடந்தாண்டு மே மாதம் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.

நோய்த் தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை அடையாளம் காணும் நோக்கில்  தொடக்கத்தில்  உருவாக்கப்பட்ட இந்த செயலி பின்னர் இ-டெம்பேட் மற்றும் சேஹாட் எனப்படும் மன நல சுகாதாரத் திட்டம் ஆகிய நோக்கங்களுக்கும் பயன் படுத்தப் படுகிறது.


Pengarang :