ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

பி.டி.பி.டி.என். பயனாளிகளில் 500,000 பேர் கடனைத் திரும்பச் செலுத்தவேயில்லை

கோலாலம்பூர், நவ 25- தேசிய உயர்கல்வி நிதிக் கழகத்தில் (பி.டி.பி.டி.என்.) கடன் பெற்ற மாணவர்களில் 539,284 பேர் தவணைப் பணத்தை திரும்பச் செலுத்தவேயில்லை.

கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை பதிவான எண்ணிக்கை  இதுவாகும் என்று உயர் கல்வியமைச்சு கூறியது. மக்களவையில் அமைச்சு வழங்கிய இந்த பதில் நாடாளுமன்ற அகப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தங்கள் கல்வியை முடித்த மாணவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 24 ஆயிரத்து 009 ஆகும் என்றும் அவர்கள்  2,460 கோடி வெள்ளி கடன் தொகையை திரும்பச் செலுத்த ஆரம்பித்திருக்க வேண்டும் என்றும் அமைச்சு வழங்கிய அந்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த மாணவர்களில் 18 லட்சத்து 84 ஆயிரத்து 725 மாணவர்கள் கடனைத் திரும்பச் செலுத்த தொடங்கிய வேளையில் 751,216 பேர் கடனை முழுமையாக செலுத்தி விட்டனர்.

மேலும், 427,861 மாணவர்கள் கடனை சீராக செலுத்தி வரும் நிலையில் 705,648 மாணவர்கள் கடனைச் செலுத்தும் முறை சீரற்றதாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடனை திரும்பச் செலுத்தாத மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் அதில் சம்பந்தப்பட்ட கடன் தொகை குறித்து  ஜெம்புல் தொகுதி தே.மு. உறுப்பினர் டத்தோ சலீம் ஷாரிப் எழுப்பிய கேள்விக்கு அமைச்சு இவ்வாறு பதிலளித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 35 லட்சம் மாணவர்களின் கடனுதவி விண்ணப்பங்களை அங்கீகரித்துள்ளது. அவர்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகையின் மதிப்பு 6,480 கோடி வெள்ளியாகும்.


Pengarang :