ECONOMYMEDIA STATEMENTNATIONAL

வீணாகும் நீரின் அளவை 2025 ஆம் ஆண்டில் 25 விழுக்காடாக குறைக்க இலக்கு

ஷா ஆலம், நவ 29– வரும் 2025 ஆம் ஆண்டுவாக்கில் பயனற்றுப் போகும் சுத்திகரிக்கப்பட்ட நீரின் அளவை 25 விழுக்காடாக குறைக்க ஆயர் சிலாங்கூர் சென்.பெர்ஹாட் நிறுவனத்தின் வாயிலாக சிலாங்கூர் அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இவ்வாண்டு அக்டோபர் மாதம் வரை சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ரா ஜெயாவில் வீணாகும் நீரின் அளவு 28.2 விழுக்காடாக உள்ளதாக அடிப்படை வசதிகள் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

கடந்தாண்டில் இதன் அளவு 28.5 விழுக்காடாக இருந்தது. பயனற்றுப் போகும் நீரின் அளவை குறைந்த பட்ச நிலைக்கு கொண்டு வருவதற்காக குறுகிய கால மற்றும் நீண்ட காலத் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

பயனற்றுப் போகும் நீரின் அளவை குறைப்பது எளிதான காரியம் அல்ல. இதற்கு குழாய் உள்ளிட்ட பாகங்களை மாற்றுதல், நிர்வாகம் மற்றும் அடிப்படை வசதி நிர்வாகம் உள்ளிட்ட அம்சங்களில் முறையான திட்டமிடல் தேவைப்படுகிறது என்றார் அவர்.

வீணாகும் நீரின் அளவைக் குறைப்பதில் நாம் மற்ற மாநிலங்களை ஒப்பிடக் கூடாது எனக் கூறிய அவர், மலாக்கா மற்றும் இதர மாநிலங்களைப் போலன்றி சிலாங்கூர் மிக நீண்ட தொலைவுக்கு குழாய்களைக் கொண்டுள்ளது என்றார்.

அடுத்தாண்டில் குழாய்களை மாற்றும் பணிக்காக 17 கோடியே 40 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாகாவும் பணியிட ஆய்வு, வடிவமைப்பு, திட்ட அமலாக்கம் ஆகியவற்றுக்கான செலவினத்தையும் இந்த ஒதுக்கீடு உள்ளடக்கியுள்ளது என்றும் அவர் சொன்னார்.


Pengarang :