ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

ஷா ஆலம் அரங்கம் உடைக்கப்படுமா?

ஷா ஆலம், டிச 3- இங்குள்ள செக்சன் 13இல் அமைந்துள்ள ஷா ஆலம் விளையாட்டரங்கம் உடைக்கப்படவுள்ளதாக சில தரப்பினர் பரப்பி வரும் வதந்திகளை சிலாங்கூர் அரசு மறுத்துள்ளது.

அந்த அரங்கத்தை உடைப்பது தொடர்பான எந்த பரிந்துரையும் மாநில ஆட்சிக்குழுவின் கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை என்று விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

அந்த அரங்கம் உடைக்கப்படும் என்ற வதந்திகள் பரவலாக பரவி வருகின்றன. புதிய அரங்கத்தை கட்டியப் பின்னர் இதனை உடைக்க வேண்டும் என்று சிலர் கூறி வருகின்றனர். எனினும், அந்த அரங்கை உடைப்பது தொடர்பான எந்தவொரு பரிந்துரை அறிக்கையும் மாநில ஆட்சிக்குழுவின் கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை என்பதை எதிர்க்கட்சித் தலைவருக்கு நான் திட்டவட்டமாக கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றார் அவர்.

மாநில சட்டமன்றத்தில் 2022 வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தை முடித்து வைத்து வைத்து உரையாற்றும் போது எதிர்க்கட்சித் தலைவர் ரிஸாம் இஸ்மாயில் எழுப்பியிருந்த இவ்விவகாரம் குறித்து கைருடின் இவ்வாறு விளக்கமளித்தார்.

அந்த விளையாட்டரங்கை புனரமைப்பது தொடர்பான பரிந்துரையை சமர்பிக்கும்படி ஆய்வுப் பணிக்காக உருவாக்கப்பட்ட சிறப்பு திட்டப் பிரிவை மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.

இவ்வாண்டு ஜூன் மாதம் 21 ஆம் தேதி உருவாக்கப்பட்ட அந்த சிறப்பு பிரிவு கூடிய விரைவில் இவ்விவகாரம் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யும் என்றார் அவர்.

இருபது ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஷா ஆலம் விளையாட்டரங்கம் சீரமைப்பு பணிகள் மூலம் விரைவில் புதுப்பொலிவு பெறும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த ஆகஸ்டு மாதம் கூறியிருந்தார்.

கடந்த 1994 ஆம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்ட இந்த அரங்கை சீரமைப்பதற்கு பொதுப்பணித் துறையின் மதிப்பீட்டின் படி 35 கோடி வெள்ளி செலவு பிடிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :