ANTARABANGSAECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

மாநில அரசு பணியாளர்களில் 41 விழுக்காட்டினர் பெண்கள்- சித்தி மரியா தகவல்

ஷா ஆலம், டிச 3- இவ்வாண்டு நவம்பர் 9ஆம் தேதி வரை சிலாங்கூர் மாநில அரசு பணியாளர்களில் 41 விழுக்காட்டினர் பெண்களாவர் என்று மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

அவர்களில் 28 விழுக்காட்டினர் முடிவெடுக்கும் அதிகாரம் உள்ள கிரேட் 52 மற்றும் அதற்கும் மேற்பட்ட பதவிகளில் உள்ளதாக அவர் சொன்னார்.

அனைத்து பிரிவுகளிலும் பணி நியமனம் மற்றும் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவது தொடர்பான முடிவு சம்பந்தப்பட்ட துறைகளின் தேவை மற்றும் திறன் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

அரசாங்கத் துறைகள் மற்றும்  அரசு நிறுவனங்களில்  பணி நியமனம் செய்வதில் பாலின கோட்டா முறை அமல்படுத்தப்படவில்லை என்பதையும்  அவர் தெளிவுபடுத்தினார்.

மாநில சட்டமன்றத்தில் இன்று அரசு துறைகளில் பணி நியமனம் செய்வதில் பாலின ரீதியாக கோட்டா முறை அமல்படுத்தப்படுகிறதா? என்று பண்டார் உத்தாமா தொகுதி உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் சித்தி மரியா இவ்வாறு சொன்னார்.

மகளிர் தலைமைத்துவ திறனை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, முக்கிய பதவிகளுக்கு நியமனம் செய்வதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட பணியாளரின் ஆற்றல் மற்றும் செயல்திறன்  மதிப்பிடுப்படுவதாக அவர் அவர் குறிப்பிட்டார்.

ஒருவர் உயர் திறனைக் கொண்டிருக்கும் பட்சத்தில் நிர்வாகம் பாலின ரீதியில் எந்த பாகுபாடும் காட்டாமல் துறைத் தலைவர் பதவிக்கு அவரை நியமிக்கும் என்றார் அவர்.


Pengarang :