ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

கூட்டரசு அரசின் சாலையை சீரமைக்க நிதி வழங்குவீர்- தவறினால் மறியல்! அஸ்மிஸாம் எச்சரிக்கை

ஷா ஆலம், டிச 7- கோலக் கிள்ளான் பகுதியில் சாலைகளை சீரமைக்கும் பணிக்கு நிதி வழங்கும்படி மத்திய அரசு வலியுறுத்தப்பட்டுள்ளது.

தங்கள் கோரிக்கைக்கு செவிசாய்க்காவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக மறியல் நடத்தப்படும் என்று கோலக் கிள்ளான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸாம் ஜமான் ஹூரி எச்சரித்துள்ளார்.

பக்கத்தான் ஹராப்பன் கூட்டணி மத்திய அரசை வழிநடத்திய போது இப்பகுதியில் சாலை சீரமைப்பு பணிகளுக்கு 5 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டதாகவும் எனினும் அரசாங்கம் மாறிய பிறகு அந்த நிதி வழங்கப்படவில்லை என்றும் அவர் சொன்னார்.

அதன் பின்னர் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் இங்கு சாலைகளைப் பராமரிப்பது தொடர்பான எந்த அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிடவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

கூட்டரசு சாலைகளை சீரமைப்பது மத்திய அரசின் பொறுப்பு என்று மக்களுக்குத் தெரியாது. அவர்கள் மாநில அரசு மீதுதான் பழி சுமத்துவார்கள். ஆகவே, இவ்விவகாரத்தில் மத்திய அரசுக்கு இந்த அவை அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மாநில சட்டமன்றத்தில் நேற்று அவர் குறிப்பிட்டார்.

2022 ஆம் ஆண்டிற்கான விநியோகச் சட்ட மசோதா தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய போது அவர் இவ்வாறு கூறினார்.

சம்பந்தப்பட்ட சாலைகளை சீரமைப்பதற்கு சிலாங்கூர் பொதுப்பணித்துறைக்கு 8 கோடியே 80 லட்சம்வெள்ளி   தேவைப்படுவதாக அறியப்படுவதாகவும் அவர் சொன்னார்.

பொதுப்பணித் துறை அமைச்சரும் போக்குவரத்து அமைச்சரும் மாநில அரசுக்கு தொடர்ந்து நிதி ஒதுக்கீட்டை வழங்காமல் இருந்தால் நாங்கள் பெரிய அளவில் மறியலில் ஈடுபடுவோம் என அவர் எச்சரித்தார்.


Pengarang :