ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

மூன்றாவது தடுப்பூசி பெற செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டம் மக்களை ஊக்குவிக்கிறது

ஷா ஆலம், டிச 9- அதிகமான மக்கள் ஊக்கத் தடுப்பூசி பெற்று அதன் வாயிலாக கோவிட்-19 நோய்த் தொற்றின் தாக்கத்தை குறைப்பதற்குரிய வாய்ப்பினை சிலாங்கூர் அரசின் செல்வேஸ் பூஸ்டர் தடுப்பூசித் திட்டம் துணை புரிகிறது.

இரண்டு தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றவர்கள் மூன்று அல்லது ஆறு மாதங்களுக்குப் பிறகு உடலில் நோய்த் தடுப்பாற்றலை அதிகரித்துக் கொள்வதற்கு இந்த மூன்றாவது தடுப்பூசி துணை புரிகிறது என்று சிலாங்கூர் கோவிட்-19 தடுப்பு பணிக்குழுவின் (எஸ்.டி.எஃப்.சி.) தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர்  ஜூல்கிப்ளி அகமது கூறினார்.

பதினெட்டு வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு குறிப்பாக, கடும் நோய்களால் பாதிக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்காக இந்த மூன்றாவது தடுப்பூசித் திட்டம் விஷேசமாக மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் சொன்னார்.

இந்த இலவச தடுப்பூசித் திட்டத்தின் வாயிலாக விரைந்து பயன்பெறும்படி பொதுமக்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். ஓமிக்ரோன் எனப்படும் புதிய வகை தொற்று பரவல் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இந்த ஊக்கத் தடுப்பூசியின் தேவை அத்தியாவசியமாகியுள்ளது என்றார் அவர்.

செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டத்தின் கீழ் 157,000 தடுப்பூசிகள் மாநில மக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி நேற்று கூறியிருந்தார்.

இந்த தடுப்பூசித் திட்டம் தொடர்பான மேல் விபரங்களை https://selcareclinic.com/our-clinics/  என்ற அகப்பக்கம் வாயிலாகப் பெறலாம்.


Pengarang :