ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

எஸ்.ஒ.பி. விதிமீறல்- மலேசிய குடும்ப நிகழ்வு ஏற்பாட்டாளர்களுக்கு அபராதம்

கோலாலம்பூர், டிச 11- கோவிட்.19 தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (எஸ்.ஒ.பி.) மீறிய குற்றத்திற்காக “மலேசிய குடும்ப 100 நாள் விழா“ ஏற்பாட்டாளர்களுக்கு 1,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் கடந்த வியாழக்கிழமை தொடங்கி நாளை வரை நடைபெறும் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்த பிரதமர் துறையின் ” செப்பாடு” எனப்படும் கூட்டு சுபிட்ச விநியோகப் பிரிவுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

கூடல் இடைவெளியைக் கடைபிடிக்கத் தவறியதற்காக நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் (சட்டம் 342) கீழ் இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் அறிக்கை ஒன்றில் கூறினார்.

இதனைத் தொடர்ந்து கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் அமைக்கப்பட்டிருந்த  அரச மலேசிய போலீஸ் படை மற்றும் சாலை போக்குவரத்து இலாகாவின் சாலைக் குற்றப்பதிவுகளுக்கான அபராத கழிவு முகப்பிடம் உடனடியாக மூடப்பட்டது.

சம்மன்களை செலுத்துவது தொடர்பான மாற்று வழிமுறைகளை அரச மலேசிய போலீஸ் படை விரைவில் அறிவிக்கும். இந்த நிகழ்வின் செயல்பாடுகளை சுகாதார அமைச்சு தொடர்ந்து கண்காணிக்கும் என்பதோடு எஸ்.ஒ.பி. விதிமுறைகள் மீறப்படும் பட்சத்தில் ஏற்பாட்டாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் தயங்காது என கைரி எச்சரித்தார்.


Pengarang :