ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரிலுள்ள 95 தமிழ்ப்பள்ளிகளுக்கு வெ.49 லட்சம் மானியம்- மந்திரி புசார் வழங்கினார்

கோம்பாக், டிச 12- சிலாங்கூரிலுள்ள 95 தமிழ்ப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு மாநில அரசு 49 லட்சம் வெள்ளியை மானியமாக வழங்கியது.

கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் தாக்குப்பிடிப்பதற்கு ஏதுவாக ஒரு தவணைக்கான அந்த நிதி ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு இணையம் வாயிலாக வழங்கப்பட்டதாக  மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 637 சீன, தமிழ் மற்றும் சமயப் பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக மாநில அரசு ஒதுக்கியுள்ள சுமார் 2 கோடியே 40 வெள்ளித் தொகையில் தமிழ்ப்பள்ளிகளுக்கான இந்த ஒதுக்கீடும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாங்கள் வழங்கும் இந்த நிதி முறையாகப் பயன்படுத்தப்படும் என பெரிதும் எதிர்பார்க்கிறோம். காரணம், பள்ளி நிர்வாகங்களுக்கும் மாநில அரசுக்குமிடையிலான வலுவான உறவுக்கு இந்த நிதியுதவி ஒரு தொடக்கப் புள்ளியாக விளங்குகிறது என்றார் அவர்.

பத்துகேவ்ஸ் தமிழ்ப்பள்ளியில் நேற்று நடைபெற்ற தமிழ்ப்பள்ளிகளுக்கு மானியத்திற்கான காசோலைகளை வழங்கும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதனிடையே, இவ்வாண்டு தொடங்கி பள்ளிகளுக்கான நிதியுதவி விண்ணப்பங்கள் யாவும் இயங்கலை வாயிலாக அதாவது எஸ்.எஸ்.ஐ.பி.ஆர். எனப்படும் மக்கள் பரிவு விவேகத் திட்டம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது என்றத் தகவலை அமிருடின் வெளியிட்டார்.

நிதி கோரிக்கை விண்ணப்பங்களை எளிதாகவும் விரைவாகவும் பரிசீலிப்பதற்கு ஏதுவாக அடுத்தாண்டு முதல் எஸ்.எஸ்.ஐ.பி.ஆர். செயலியைப் பயன்படுத்தி தகவல்களை உள்ளிடலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

 


Pengarang :