HEADERADMEDIA STATEMENTNATIONAL

வெ. 700,000 கொள்ளை- எம்.ஏ.சி.சி. அதிகாரி உள்பட இருவருக்கு தடுப்புக் காவல்

கோலாலம்பூர், டிச 13- சுமார் ஏழு லட்சம் வெள்ளி மதிப்பிலான பொருள்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி.) அதிகாரி உள்பட இருவர் முறையே  மூன்று மற்றும் நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

முப்பது வயது மதிக்கத்தக்க அவ்விரு சந்தேகப் பேர்வழிகளையும் டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் நேற்றும் கடந்த சனிக்கிழமையும் கைது செய்ததாக டாங் வாங்கி போலீஸ் தலைவர் ஏசிபி நோர் டேலிஹான் யாஹ்யா கூறினார்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக 12 பேரை போலீசார் அழைத்துள்ளதாக இன்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் சொன்னார்.

இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 395வது பிரிவின் கீழ் அவர்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

கும்பலாக வீடு புகுந்து கொள்ளையிட்டது தொடர்பில் தங்கள் துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதை எம்.ஏ.சி.சி நேற்று உறுதிப்படுத்தியது.


Pengarang :