Penanaman padi wangi MRQ 88 di Sekinchan, Selangor. Foto Sumber: YB Ng Suee Lim
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நெல் உற்பத்தி பாதிப்பு- விரிவான ஆய்வை மேற்கொள்ள சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கை

ஷா ஆலம், டிச 14- சபாக் வட்டாரத்தில் நெல் உற்பத்தி குறைந்ததற்கான காரணத்தைக் கண்டறிய விரிவான ஆய்வை மேற்கொள்ளும்படி சம்பந்தப்பட்ட தரப்பினர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

விவசாயத் துறை சார்ந்த தரப்பினர் நெல் விதை மற்றும் உரங்களை மாற்றிய போதிலும் மகசூல் பாதிப்பு தொடர்ந்த வண்ணம் உள்ளதாக சபாக் சட்டமன்ற உறுப்பினர் அகமது முஸ்தாயின் ஓத்மான் கூறினார்.

ஒவ்வொரு பருவத்தின் போதும் 100 கிலோ வரை நெல் உற்பத்தி குறைந்து வருகிறது. இதன் காரணமாக பாரிட் சத்து முதல் பாகான் தெராப் வரையில் உள்ள சுமார் 3,000 விவசாயிகள் வருமான இழப்பை எதிர்நோக்கியுள்ளனர் என்று அவர் சொன்னார்.

இவ்விவகாரம் குறித்து தாம் மாநில அரசிடம் பல முறை எடுத்துரைத்துள்ளதாக கூறிய அவர், இப்பிரச்சனைக்கு நீண்டகாலத் தீர்வை காணும் வகையில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

சபாக் பெர்ணம் மட்டுமின்றி கிசிஞ்சான் வட்டாரத்திலுள்ள விவசாயிகளின் நலனைக் காப்பதற்கு ஏதுவாக நெல் உற்பத்தி பாதிப்பு குறித்த ஆய்வு விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் அவர் கூறினார்.

கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி இதே விவகாரத்தை எழுப்பிய சிகிஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் இங் சுயி லிம், சிலாங்கூரின் நெல் களஞ்சியமாக விளங்கும் இப்பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு உதவும் வகையில் விவசாயம் மற்றும் உணவுத் தொழில்துறை அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.


Pengarang :