ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நீட்டிக்கப்படாது- அமைச்சர் வான் ஜுனைடி தகவல்



கோலாலம்பூர், டிச 14- பதினான்காவது நாடாளுமன்றத்தின் நான்காம் தவணைக்கானஇரண்டாவது கூட்டத் தொடரில் நீடிப்பு இருக்காது என்று பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி தொடங்கிய தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் திட்டமிட்டபடி டிசம்பர் 16 ஆம் தேதி அது முடிவடையும் என்று அவர் சொன்னார்.

நடப்புக் கூட்டத் தொடரில் 2022 பட்ஜெட் மற்றும் கூட்டாட்சி அரசியலமைப்பில் உள்ள பல பிரிவுகளின் திருத்தங்களை உள்ளட்டக்கிய ஏழு மசோதாக்கள் மீது கவனம் செலுத்தப்படுவதாக வான் ஜுனைடி கூறினார்.

1963 ஆம் ஆண்டு மலேசியா ஒப்பந்தத்திற்கேற்ப கூட்டாட்சி அரசியலமைப்பில் பல விதிகளை திருத்துவதற்கான மசோதாவை தாக்கல் செய்வது இதில் அடங்கும் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பெரும்பாலான அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தங்கள் ஆண்டு இறுதி விடுமுறைக்கான திட்டங்களை ஏற்கனவே தயாரித்துவிட்டதால் அமர்வை நீட்டிக்காமல் இருப்பது நல்லது என்று கூறினார்.

இருப்பினும், நம்மில் பலர் ஏற்கனவே விடுமுறை மனநிலையில் இருப்பதை நான் புரிந்து கொண்டாலும் பல முக்கியமான மசோதாக்களுக்கு வாக்களிப்பளிப்பதற்காக அமர்வில் கலந்துகொள்ள  சக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பைக் கோர விரும்புகிறேன் என்று அவர் கூறினார்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி தொடங்கி நடைபெறவிருக்கும் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ஒன்பது மசோதாக்கள் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வான் ஜுனைடி கூறினார்.

Pengarang :