ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மூடா கட்சியை 14 நாட்களுக்குள்  பதிவு செய்வீர்-உள்துறை அமைச்சருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கோலாலம்பூர், டிச 14- “இக்கத்தான் டெமோக்கிராடிக் மலேசியா“ (மூடா) கட்சியை 14 நாட்களுக்குள் அரசியல் கட்சியாக பதிவு செய்யும்படி உள்துறை அமைச்சருக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

மூடா கட்சியை அரசியல் கட்சியாக பதிவு செய்யும் தங்களின் விண்ணப்பத்தை நிராகரித்த உள்துறை அமைச்சர் மற்றும் சங்கங்களின் பதிவாதிகாரியின் முடிவை எதிர்த்து சைட் சடிக் சைட் அப்துல் ரஹ்மான் மற்றும் 12 பேர் செய்து கொண்ட சீராய்வு மனுவை  நீதிபதி டத்தோ நோரின் பகாருடின் ஏற்றுக் கொண்டு இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

இன்று நடைபெற்ற இந்த வழக்கில் சைட் சாடிக் மற்றம் 12 பேரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் லிம் வேய் ஜிய்ட் இந்த தகவலை ஊடகங்களுக்கு வழங்கினார்.

பிரதிவாதிகள் தரப்பின் இந்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அரசியல் கட்சியாக மூடாவை பதிவு செய்யும் விண்ணப்பத்தை நிராகரிக்கும் உள்துறை அமைச்சரின் முடிவையும் ரத்து செய்தார் என்று லிம் சொன்னார்.

இது தவிர, மூடா கட்சிக்கு 10,000 வெள்ளியை செலவுத் தொகையாக வழங்கும்படி உள்துறை அமைச்சர் மற்றும் சங்கங்களின் பதிவதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதனிடையே, இந்த வழக்கில் ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் முகமது  சலேவுடின் அலி நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை உறுதிப்படுத்தினார்.

மூடா கட்சியை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கு தாங்கள் செய்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து உள்துறை அமைச்சர் மற்றும் சங்கங்களின் பதிவதிகாரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சைட் சடிக் மற்றும் 12 பேர் செய்து கொண்ட மனுவை உயர் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி ஏற்றுக் கொண்டது.


Pengarang :