ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

ஊக்கத் தடுப்பூசிப் பெற 33,000 பேர் செலங்கா செயலி வழி பதிவு

ஷா ஆலம், டிச 15- சிலாங்கூர் அரசின் செல்வேஸ் பூஸ்டர் திட்டத்தின் வழி ஊக்கத் தடுப்பூசி பெறுவதற்கு நேற்று இரவு வரை செலங்கா செயலி வாயிலாக 33,358 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

மாநிலத்திலுள்ள 13 செல்கேர் கிளினிக்குகளில் ஊக்கத் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையின்  போது கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக  இந்த முன்பதிவு முறை அமல்படுத்தப் படுவதாக பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

செலங்கா செயலி வழி முன்பதிவு செய்யாதவர்களுக்கு இந்த ஊக்கத் தடுப்பூசித் திட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படாது என்றும் அவர் சொன்னார்.

ஒவ்வொரு செல்கேர் கிளினிக்கிற்கும் தினசரி 150 ஊக்கத் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளதோடு தடுப்பூசி செலுத்தும் பணியில் இரு மருத்துவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். 

எனினும், செல்கேர் பூச்சோங் மற்றும் ஸ்கைபார்க் போன்ற இடங்களில் அதிகமானோர் கூடுவதால் அங்கு தினசரி 200 தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன என்று அவர் கூறினார்.

இந்த முன்பதிவு திட்டம் தொடங்கிய முதல் நாளான நேற்று பொதுமக்களிடமிருந்து அமோக ஆதரவு கிடைத்துள்ளது. கலவையான தடுப்பூசிகள் அதிக ஆற்றல் கொண்டவையாக உள்ளன என்றத் தகவலை அறிந்த காரணத்தால் பெரும்பாலோர் சினோவேக் தடுப்பூசியை பெறுவதில் ஆர்வம் காட்டுகின்றனர் என்றார் அவர்.

மைசெஜாத்ரா வழி மேற்கொள்ளப்படும் ஊக்கத் தடுப்பூசித் திட்டத்திற்கு குறைவான ஆதரவு கிடைத்து வருவதை கருத்தில் கொண்டு இந்த தடுப்பூசித் திட்டத்தை செல்கேர் கிளினிக்குகளில் மேற்கொள்ள மாநில அரசு முடிவெடுத்ததாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :