ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

ஊக்கத் தடுப்பூசி பெறும் தேதி மைசெஜாத்ரா, எஸ்.எம்.எஸ். வழி தெரிவிக்கப்படும்- நோர் ஹிஷாம்

கோலாலம்பூர், டிச 16– ஊக்கத் தடுப்பூசி பெறுவதற்கான முன்பதிவு தேதி எஸ்.எம்.எஸ். எனப்படும் குறுந்தகவல் மற்றும் மைசெஜாத்ரா செயலி வாயிலாக சம்பந்தப் பட்டவர்களுக்குத் தெரிவிக்கப்படும்.

ஊக்கத் தடுப்பூசித் திட்டத்தை விரைவுபடுத்தும் நோக்கில்  இந்நடவடிக்கை மேற்கொள்ளப் படுவதாக சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

ஆகவே, வருகைக்கான முன்பதிவு தேதியை தவறவிடாமலிருப்பதற்காக  பொதுமக்கள் தங்கள் கைபேசியில் வரும் தகவல்களை கூர்ந்து கவனிக்க வேண்டும் என்பதோடு ஊக்கத் தடுப்பூசியைப் பெற விருப்பமா? இல்லையா? என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தடுப்பூசியை பெறுவதற்கு வழங்கப்பட்ட தேதியை  தவறவிடும் பட்சத்தில் அருகிலுள்ள தடுப்பூசி மையங்களுக்குச் சென்று காத்திருப்போர் பட்டியலில் தங்கள் பெயரை பதிந்து கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

ஊக்கத் தடுப்பூசியை செலுத்துவதற்கான அனுமதி கடந்த செப்டம்பர் மாதம் வழங்கப்பட்டது முதல் இதுவரை 39 லட்சத்து 44 ஆயிரத்து 858 பேர் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் கூறினார்.

நாற்பது வயதுக்கும் மேற்பட்டவர்கள், கடும் நோயினால் பாதிக்கப்பட்ட 18 வயதுக்கும் மேற்பட்டோர், நீண்ட கால சுகாதார மையங்களில் தங்கிருப்போர் மற்றும் பணியாளர்கள், கர்ப்பிணி பெண்கள், வெளிநாடுகளுக்குச் செல்லவிருப்பவர்களுக்கு இந்த ஊக்கத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.


Pengarang :