ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டத்தின் வழி 5,000 பேர் தடுப்பூசி பெற்றனர்

பூச்சோங், டிச 16- சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் வரை சுமார் 5,000 பேர் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி தொடங்கிய திட்டத்தின் கீழ் செலங்கா செயலியில் பதிந்து கொண்ட 33,000 த்திற்கும் மேற்பட்டோரில் இவர்களும் அடங்குவர் என்று பொது சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

மாநிலத்திலுள்ள 13 செல்கேர் கிளினிக்குகளில் மேற்கொள்ளப்படும் இந்த ஊக்கத் தடுப்பூசித் திட்டத்தின் வழி தினசரி 2,000 தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. ஒவ்வொரு கிளினிக்கிற்கும் வழங்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 150 ஆக கட்டுப்படுத்தப்படுகிறது என்றார் அவர். செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டம் ரவாங், ஸ்ரீ கெம்பாங்கான், பலாக்கோங்,தாமான் டெம்ப்ளர், தஞ்சோங் சிப்பாட், பண்டார் உத்தாமா ஆகிய தொகுதிகளில் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஊக்கத் தடுப்பூசித் திட்டத்திற்கு 157,000 தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார். பதினெட்டு வயதுக்கும் மேற்பட்டவர்கள் அருகிலுள்ள செல்கேர் கிளினிக்குகளில் இந்த தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளலாம் இன்றும் அவர் ஆலோசன கூறியிருந்தார். தடுப்பூசி வழங்கப்படும் செல்கேர் கிளினிக்குகள் பட்டியலை https://selcareclinic.com/our-clinics/ என்ற அகப்பக்கம் வாயிலாக அல்லது செலங்கா செயலி வழி அறிந்து கொள்ளலாம்.


Pengarang :