ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சரவா தேர்தல்- இன்று காலை 7.30 மணிக்கு வாக்களிப்பு தொடங்கியது

கூச்சிங், டிச 18- சரவா மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள 1,866 வாக்களிப்பு மையங்களில் இன்று காலை 7.30 மணி முதல் வாக்களிப்பு தொடங்கியது.

இம்மாநிலத்தில் பதிவு பெற்ற 12 லட்சத்து 52 ஆயிரத்து 14 வாக்காளர்களில் 12 லட்சத்து 13 ஆயிரத்து 769 வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை இன்று நிறைவேற்றவுள்ளனர்.

மொத்தம் உள்ள 82 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடவடிக்கையை கண்காணிக்க 46,565 தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்களிப்பு இன்று மாலை 5.00 மணிக்கு முடிவுக்கு வரும்.

எனினும், குறைந்த வாக்காளர்களைக் கொண்ட வாக்குச் சாவடிகள் பிற்பகல் 12.00 மணிக்கு மூடப்படும். வெறும் 97 வாக்காளர்களை மட்டுமே கொண்ட முவாரா துவாங் தொகுதியிலுள்ள ஒரு வாக்குச் சாவடியும் இதில் அடங்கும்.

இந்த தேர்தலையொட்டி 18,141 பேர் கடந்த 14 ஆம் முன்கூட்டியே வாக்களித்த வேளையில் மேலும் 17,885 பேர் தபால் மூலம் வாக்களித்தனர்.

இந்த தேர்தலில் 13 தொகுதிகளில் மும்முனைப் போட்டியும் 33 தொகுதிகளில் நான்கு முனைப் போட்டியும் 24 தொகுதிகளில் ஐந்து முனைப் போட்டியும் 7 தொகுதிகளில் ஆறு முனைப் போட்டியும் ஒரு தொகுதியில் எட்டு முனைப் போட்டியும் ஒரு தொகுதியில் நேரடிப் போட்டியும் நிலவுகிறது.

 


Pengarang :