ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

பேரிடர் மேலாண்மைக் குழு சிறப்புக் கூட்டத்திற்கு மந்திரி புசார் தலைமையேற்றார்

ஷா ஆலம், டிச 23- சிலாங்கூரில் வெள்ளத்திற்கு பிந்தைய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக நேற்றிரவு நடத்தப்பட்ட மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் சிறப்புக் கூட்டத்திற்கு மந்திரி புசார் தலைமையேற்றார். வெள்ளப் பேரிடர் தொடர்பில் அனைத்து அரசு துறைகளின் கருத்தையும் பெறுவதற்காக இக்கூட்டம் நடத்தப்பட்டதாக மந்திரி புசார் கூறினார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்பரவுப் பணிகளை மேற்கொள்வது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தனது முகநூல் வாயிலாக வெளியிட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார். அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நடத்தப்பட்ட இக்கூட்டத்தில் மாநில எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ரிஸாம் இஸ்மாயிலும்  கலந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

மக்களுக்கு உதவுவதில் அனைத்து தரப்பினரும் அரசியல் வேறுபாடுகளைக் களைந்து ஒன்றிணைய வேண்டும் என்ற மாநில அரசின் நோக்கத்திகேற்ப இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.

இக்கூட்டத்தில் பொது தற்காப்பு படை, போலீஸ், சமூக நல இலாகா, வானிலை ஆய்வுத் துறை, மாநில சுகாதார இலாகா ஆகிய துறைகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இம்மாதம் 17 முதல் 19 வரை பெய்த அடைமழை காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது.


Pengarang :